கல்முனை என்பது தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான மாநகரம்

இருதரப்பும் விட்டுக்ெகாடுக்க வேண்டும்

கல்முனையை தமிழர்களுக்கான நகரமாகவோ முஸ்லிம்களுக்கு மட்டுமான நகரமாகவோ நாம் பார்க்கவில்லையென உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

பதிவாளர் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள ஒருநாள் விரைவான காணிப்பதிவு மற்றும் சர்வதேச தரத்திற்கு இசைவான புதிய பாதுகாப்பு உத்திகளுடனான விவாக, -பிறப்பு-, இறப்புச் சான்றிதழ் பெறும் சேவையினை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்முனை காணிப்பதிவாளரும் மேலதிக மாவட்டப்பதிவாளருமான இசற். நசுர்தீன் தலைமையில் கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்,

கல்முனை என்பது தமிழ்-, முஸ்லிம் ஆகிய இரு சமூக மக்களுக்குமான நகரமாகும்.வெறுமனே இதனை ஒரு தரப்பினருக்கான நகரமாகப் பார்க்க முனைவதனாலேயே நாம் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். இதனை அரசியல்வாதிகள் தைரியமாகவும் தெளிவாகப் பேசினால் மாத்திரமே தேங்கிக் கிடக்கின்ற பிரச்சினைகளுக்கு சமூகமான தீர்வுகளைக் காணமுடியும்

இப்போது இருக்கின்ற ஐக்கியத்தை விடக் கூடுதலான சமாதானத்தையும் தொடர்ந்தும் பேண வேண்டுமாயின் ஒரு தரப்பினர் மட்டும் உரிமை கோருகின்ற ஒன்றாக கல்முனையைப்பார்க்க முனைவதிலிருந்து விடுபட வேண்டும்.இதனால் எதிர்காலங்களில் அரசியல்வாதிகளான நாம் இன ஐக்கியத்தைப் பேணுகின்ற விடயங்களில் அதிக அக்கறை காட்டவேண்டியுள்ளது என்றார்.

கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், -கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள்-, சட்டத்தரணிகள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர்.

பெரியநீலாவணை தினகரன் நிருபர்

 

Mon, 03/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை