உலகை வெற்றிகொள்ளக்கூடிய இளம் தலைமுறை உருவாகப்பட வேண்டும்

எமது கலாசார கட்டமைப்புகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களை ஒருபோதும் எந்தவித சக்திகளுக்கும் அடிபணிய விடக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்தார்.  

எமது கலாசார சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்கும், உலகினை வெற்றிகொள்ளத்தக்க கல்வி கற்ற இளம் தலைமுறையொன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமென ஹேனகம மத்திய வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (26) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன  இதனைத் தெரிவித்தார்.  

அங்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள்  வரவேற்றனர்.  

இதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி, தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மாத்திரம் கல்வியை பெற்றுக்கொள்ளாது, தான் சார்ந்த சமூகத்தினதும் உலகினதும் முன்னேற்றத்திற்காகவே ஒருவர் கல்வியை பெற வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, தாய் நாட்டின் கீர்த்தியை உலகெங்கும் பரவச் செய்யக்கூடிய கல்வி கற்ற எதிர்கால தலைமுறையொன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 1944ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஹேனகம மத்திய வித்தியாலயமானது, மத்திய வித்தியாலய எண்ணக்கருவின் கீழ் நாட்டில் உருவான 11வது பாடசாலையாகும். தற்போது சுமார் 3,200மாணவர்கள் கல்விகற்கும் இப்பாடசாலையில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் தொழிநுட்ப விடயப் பரப்புகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

ஹேனகம மத்திய வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார். 

பாடசாலையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் ஜனாதிபதியால் இதன்போது வழங்கப்பட்டன. பாடசாலையின் அதிபர் விஜய சத்தியஜித் குலரத்னவினால் ஜனாதிபதிக்கு இதன்போது விசேட நினைவுப் பரிசொன்று வழங்கப்பட்டது.  

லசந்த அழகியவன்ன, உபாலி குணரத்ன, சந்தன ஜயக்கொடி உள்ளிட்ட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

Wed, 03/27/2019 - 08:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை