'மெத்சிறி செவன' சிறுநீரக பராமரிப்பு நிலையம் இன்று மக்களிடம் கையளிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக நிதியத்தின் 437 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அநுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (20) திறந்துவைக்கப்படவுள்ளது.

பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் தனது பிரசார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியம் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவிகள் மூலம் பலமான நிதியமாக மாறியுள்ளது. இந் நிதியத்தை பயன்படுத்தி சிறுநீரக நோயாளிகளின் நலன்பேணல்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் நோய்க்கான காரணங்களை கண்டறிவதற்குரிய ஆராய்ச்சிகளுக்கான பங்களிப்புகளை வழங்குதல், சிறுநீரக நோய் அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதேநேரம் தேசிய சிறுநீரக நிதியத்தின் 628 மில்லியன் ரூபா செலவில் கண்டி பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மத்திய நிலையம் அண்மையில் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டதுடன், 89 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிராந்துருகோட்டை சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மத்திய நிலையம் வெகு விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

156 மில்லியன் ரூபா செலவில் களனி பல்கலைக்கழகத்தில் சிறுநீரக நோய் ஆராய்ச்சி, தகவல் மத்திய நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், மூளைச்சாவடைந்த நோயாளிகளின் சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக விமானங்கள் மூலம் கொண்டு செல்வதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களும் தற்போது நடைமுறையிலுள்ளன.

800 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட செலவில் சிறுநீரக நோய் பரவியுள்ள பிரதேசங்களில் தற்போது சுமார் 600 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 600வது நீர் சுத்திகரிப்புத் தொகுதி “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் திறந்து வைக்கப்படுவதுடன் இணைந்ததாக இன்று இசுறுமுனி ரஜமஹா விகாரையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

நீர் சுத்திகரிப்பு தொகுதிக்கான வசதியுள்ள 7,600 குடும்பங்களுக்கு வீட்டு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல், மழைநீர் தாங்கிகளை பெற்றுக்கொடுத்தல், குழாய் நீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், ஏற்கனவே உள்ள குழாய் முறைமைகளை விரிவுபடுத்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது தேசிய சிறுநீரக நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், சிறுநீரக நோயினால் தாய் அல்லது தந்தையை இழந்த பாடசாலை பிள்ளைகளுக்கு மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபா வீதம் ஜனாதிபதி கல்விப்புலமைப் பரிசில்களை வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் சிறுநீரக நோயாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூபா 5,000 வீதம் வாழ்வாதார உதவிகளை வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் சிறுநீரக நோயாளிகள் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் தேசிய சிறுநீரக நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

1990களில் நாட்டில் முதன் முறையாக நோய்க் காரணி கண்டறியப்படாத நாட்பட்ட சிறுநீரக நோய் கண்டறியப்பட்டது. சிறுநீரக நோயினால் தற்போது நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார சமூக மற்றும் சுகாதார பிரச்சினைகளும் உருவாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ரஜரட்ட பிரதேச விவசாய சமூகம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்தவர் என்ற வகையில் சிறுநீரக நோயை இந்த நாட்டிலிருந்து ஒழிப்பதை முக்கிய பொறுப்பாக கருதி செயற்பட்டு வருகின்றார். அந்த வகையில் சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டு சிறுநீரக நோய் தடுப்புக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் அவரது வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை