அறுவைக்காட்டை எதிர்ப்பதால் என்மீது வனவள அழிப்பு குற்றச்சாட்டு

வில்பத்து சரணாலயத்துக்கு ஏதேனும் அழிவை ஏற்படுத்தியிருந்தால் எந்த தண்டனையையும் ஏற்கத் தயார்

நாட்டின் பெறுமதிமிக்க சொத்தான வில்பத்து சரணாலயத்துக்கு ஏதாவது அழிவை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு வழங்கப்படும் எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரென அமைச்சர் ரிஷாட் பதியதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அறுவைக்காடு பிரதேசத்தில் 7,900 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் பாரிய திண்மக்கழிவகற்றல் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையாலேயே தனக்கு எதிராக வன அழிப்புக் குற்றச்சாட்டை முன்வைத்து பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

வில்பத்து சரணாலயம் மன்னார் மாவட்டத்தில் இல்லை. அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே சரணாலயம் உள்ளது. இவ்வாறான நிலையில் எல்.ரி.ரி.ஈயினரால் வெளியேற்றப்பட்ட மன்னார் மாவட்ட மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தியமைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரசாரம் யாரை திருப்திப்படுத்துவதற்கானது? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அறுவைக்காடு பிரதேசத்தில் பாரிய திண்மக்கழிவகற்றல் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏன் 70 கிலோமீற்றருக்கு அப்பால் குப்பைகளைக் கொண்டு செல்கின்றீர்கள். புதிய தொழில்நுட்பங்கள் உள்ள நிலையில் நீண்டதூரம் குப்பைகளைக் கொண்டுசெல்வது ஏன்? அங்குள்ள மக்கள் பல நாட்களாக வீதிகளில் இறங்கிப் பேராடிவருகின்றனர் என்ற விடயத்தை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் வெளிப்படுத்தியிருந்தேன். அதன் பின்னரே எனக்கு எதிராக வில்பத்து விவகாரம் குறித்த சேறுபூசும் போலிப் பிரசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் விடயங்கள் எதுவும் உண்மையில்லை.

1990ஆம் ஆண்டு இரண்டு மணி நேரத்தில் எல்.ரி.ரி.ஈயினரால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் 2012ஆம் ஆண்டே மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றத்துக்குச் சென்றனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 3 இலட்சம் பேரையும் மீளக் குடியமர்த்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் மீள்குடியேற்ற அமைச்சராக நான் பொறுப்பு வகித்தேன். எனினும் 2010ஆம் ஆண்டு எனக்கு வேறு அமைச்சுப் பதவி கிடைத்த பின்னர், மீள்குடியேற்ற அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களின் காலப் பகுதியிலேயே முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் ஊடாக தீர்மானிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்படும் சேறுபூசும் பிரசாரம் அப்பட்டமான பொய்யாகும். சமூக ஊடகங்களின் ஊடாக போலிப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் இப்பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை. யார் செய்கின்றார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

நானோ அல்லது நான் சார்ந்த சமூகமே எந்தவொரு தவறான செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. வில்பத்த சரணாலயம் என்பது நாட்டின் அரியதொரு சொத்தாகும். அதனை அழிக்கும் வகையில் நான் செயற்பட்டிருந்தால் அதற்காக வழங்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராகவிருக்கின்றேன். தேவையற்ற போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 03/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை