திருக்கேதீஸ்வர வளைவு சேதம்; தமிழருக்கு பெரும் வெட்கக்கேடு!

வளைவை மீளப்பொருத்த மன்னார் நீதவான் உத்தரவு

செய்திக்கு மன்னார் குரு முதல்வர் மறுப்பு

 சிவராத்திரியை முன்னிட்டு திருகேதீஸ்வர ஆலய வீதி என அறியப்பட்ட வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டதும், அவ்வேளையில் அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் ஒட்டுமொத்த தமிழினத்தையுமே வெட்கக்கேட்டுக்கும், சாபக்கேட்டுக்கும் உள்ளாக்கியுள்ளது.

தமிழர் ஒற்றுமையை கேள்விக்கும், ஏனைய இனத்தோர் மத்தியில் கேலிக்கும் உள்ளாக்கியுள்ள இந்நிகழ்வு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. அமைதிக்கு வழிகாட்ட வேண்டிய மதத் தலைவர்கள், வன்முறைக்கு தலைமை தாங்குவதை கடுமையாக கண்டிக்கின்றேன் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு தேவாலயம் தமிழ் கத்தோலிக்கர்களால் பாதுகாக்கப்படும் கத்தோலிக்க தலம் என்பது போன்று, அதே மாவட்டத்தில் அமைந்துள்ள திருகேதீஸ்வர ஆலயம், தமிழ் இந்துக்களால் பாதுகாக்கப்படும் பாடல்பெற்ற இந்து தலம் என்பதும் அறியப்பட வேண்டும். இரு தரப்புகளும், இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

இதை மீறும் எந்தவோர் அடாவடி நடவடிக்கையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில், முதலில், இன்று (4ஆம் திகதி) சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்குரிய பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இரண்டாவது, உடைக்கப்பட்ட தற்காலிக வளைவு தூக்கி நிறுத்தப்பட வேண்டும். மூன்றாவது, மத வன்முறையில் ஈடுபட்டவர்கள், 5ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட வேண்டும் என நேற்று இரவு மன்னார் பொலிஸ் தலைமையக அதிகாரி இரத்நாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீநாத் பெரேரா, பிரதி பொலிஸ் மா அதிபர் அபேவிக்கிரம ஆகியோருடன் பேசி பணிப்புரைகள் வழங்கியுள்ளேன்.

இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிடுமாறு மன்னார் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை தொலைபேசியில் அழைத்துக் கூறியுள்ளேன்.

சிவராத்திரியை அடுத்து, விரைவில் திருகேதீஸ்வர ஆலயத்துக்கு நேரடியாக வந்து சகல தரப்பினரிடமும் கலந்து பேசி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை நான் பெற்றுத்தருவதாக திருகேதீஸ்வர ஆலய அறங்காவலர்களிடம் உறுதியளித்துள்ளேன் எனத் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். இந்நிலையில், உடைக்கப்பட்ட திருக்கேதீச்சர ஆலய வீதி வளைவை, சிவராத்திரியையொட்டி உடனடியாக, மீண்டும் நான்கு நாட்களுக்குப் பொருத்தி வைக்கும்படி, மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சிவராத்திரி உற்சவம் நடைபெற வேண்டிய அவசரம் கருதி, இன்றைய தினம் (நேற்று) விடுமுறை என்று நாளை (இன்று) வரை காத்திருக்காமல், இவ்வழக்கை நீதவானின் இலலத்திற்குக் கொண்டு செல்லும்படி, மன்னார் பிரதி பொலிஸ் மாஅதிபர் அபேவிக்கிரமவுக்கு நேற்றுக் காலை அறிவுறுத்தி இருந்ததாகவும் அதன்படி வழக்கு நீதவானிடம் கொண்டு செல்லப்பட்ட வேளையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேசமயம், மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து ஊடகங்களூடாக திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் கவலை தெரிவித்துள்ளார்.

திரிவுபடுத்தப்பட்டுள்ளதும், உண்மைக்குப் புறப்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதுமான செய்திகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்டஆயர் இல்லத்தினால் தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்று நேற்று திங்கட்கிழமை(04) விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்ைகயிலேயே அன்ரனி விக்டர் சோசை அடிகளார் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக