சோபா உடன்படிக்கை; இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பு

இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளது.இலங்கை ஜனாதிபதிக்குக் கூட வழங்கப்படாத வசதிகள்இவ் ஒப்பந்த்த்தின் மூலம் அமெரிக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளது என்று ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளது. சோபா (ஸ்டேட் ஒப் போர்ஸ்) என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு அமைப்பின் உறுப்பினர்களோ கடவுச்சீட்டின்றி தமது ஆள்அடையாள அட்டைகளுடன் இலங்கைக்கு வரமுடியும். அவ்வாறு வருபவர்களின் உடமைகளையோ அல்லது அவர்களுடன் எடுத்துவரும் வாகனங்களையோ சுங்க அதிகாரிகளோ அல்லது எந்த அதிகாரிகளோ சோதனையிட முடியாது. அவர்களிடம் எந்தவித வரியும் அறவிடப்படாது. இலங்கையில் இருக்கும் காலத்தில் ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு அமெரிக்க சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை ஜனாதிபதிக்குக் கூட வழங்கப்படாத வசதிகள் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவுக்கு இலங்கை ஜனாதிபதி சென்றால் அவர் கடவுச்சீட்டை எடுத்துச் செல்லவேண்டும். அவருடைய உடமைகள் அந்நாட்டு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்படும். எனினும், சோபா ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை வரும் அமெரிக்க இராணுவத்தினரிடம் எந்தவித சோதனையும் நடத்தப்படாது. ஜெனீவாவில் நாட்டின் இறைமை பற்றிப் பேசுபவர்கள் இவ்வாறான ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறைமைய தாரைவார்த்துக் கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

அமெரிக்க எப்பொழுது ஏதாவது ஒரு நாட்டுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எப்பொழுது எமது நாட்டை அவர்கள் பயன்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என்றார்.

Wed, 03/27/2019 - 11:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை