சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி இன்று ஆசிரியர்கள் சுகவீன லீவு போராட்டம்

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி இன்று 13ஆம் திகதி சுகவீன  விடுமுறைப் போராட்டமொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். 

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, இதுதொடர்பில் தெரிவிக்கையில்:  

இன்றைய தினம் சுகவீன விடுமுறையோடு நாட்டின் பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

கடந்த 20வருடங்களுக்கு மேல் நிலவும் ஆசிரியர்கள், அதிபர்கள் சேவை சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்வதால் அதற்கெதிராக இன்றைய தினம் சுகவீன லீவு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.  

மூன்று மாத நிலுவைப்பணம் உள்ளிட்ட மேலும் ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இதனால் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களின் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை பாதிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மேற்படி சங்கம் பரீட்சை ஆணையாளரைக் கேட்டுக்கொண்டுள்ளது. பரீட்சை ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ள மேற்படி சங்கம், தமது போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் இதற்கிணங்க பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அவர்கள் அசௌகரியமின்றி பரீட்சை எழுதுவதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. தமது போராட்டத்தினால் பரீட்சைத் திணைக்களத்திற்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தமது சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.  (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

Wed, 03/13/2019 - 09:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை