போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான புதிய தேசியத்திட்டம் அறிமுகம்

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய நிகழ்ச்சித்திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று (06) நடைபெறும் கலந்துரையாடலின்போது இந்நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக அறிவு பூர்வமான முறைமைகளை பயன்படுத்துவது குறித்து நேற்று (05) பத்தரமுல்லை, வோட்டஸ் எர்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதிஇதனைத்தெரிவித்தார்.

முப்படையினர், பொலிஸார், சுங்கத் திணைக்களம், மதுவரி திணைக்களம், கரையோர பாதுகாப்பு ஆகிய அனைத்து நிறுவனங்களினதும் சிறந்த ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் இப்புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் போதைப்பொருள் ஒழிப்புக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தில் புதிய நடவடிக்கைகளை தேசமும் மக்களும் கண்டுகொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோத போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற சிலரால் மேற்கொள்ளப்படும் தடைகள் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஒரு நாட்டை சிறந்ததோர் நாடாக கட்டியெழுப்ப வேண்டுமானால் கொள்கைகளும் தண்டனைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒழுக்கப் பண்பாடான சமூகம் மற்றும் சிறந்த கலாசாரம் பற்றி எமது கீர்த்திமிகு வரலாற்றில் எழுதப்பட்டிருப்பது கடந்த காலங்களில் ஆன்மிகப் பெறுமானங்களுடன் கூடிய தண்டனைகள் நடைமுறைப்படு த்தப்பட்டதன் காரணத்தினாலாகும் என்பதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

கிராமிய மட்டத்தில் பரவியுள்ள சட்டவிரோத மதுபானங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் கிராமங்களிலுள்ள சட்டவிரோத மதுபானங்களை முழுமையாக ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் பொலிஸ் மாஅதிபருக்குப் பணிப்புரை விடுத்தார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக தனது வழிகாட்டலின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட அதிகார சபையின் நடவடிக்கைகளும் அடுத்த மூன்று மாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக அறிவு பூர்வமான முறைமைகளை விரிவாகவும் சிறந்த ஒருங்கிணைப்புடனும் பயன்படுத்துவது குறித்தும் இந்த நிபுணர்கள் மாநாட்டில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.

நேற்று ஆரம்பமாகி இன்றும் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு, நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், தேசிய அபாயகர ஔடதக் கட்டுப்பாட்டுச் சபையினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்து தனக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அபாயகர ஔடதக் கட்டுப்பாட்டு சபையின் தலைவருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது நிபுணர்களினதும் அத்துறையின் முன்னோடிகளினதும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை தமது அரசாங்கம் பெரிதும் ஏற்றுக்கொள்வதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சங்கைக்குரிய தம்மஜீவ நாயக்க தேரர், சங்கைக்குரிய குப்பியாவத்தே பௌத்தானந்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் தலதா அதுகோரள, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர, தேசிய அபாயகர ஔடதக் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பேராசிரியர் சமன் அபேசிங்க ஆகியோர் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஊடக நிறுவன தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி அறிவிப்பு

 

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை