பிஸ்கட், இனிப்பு பண்டங்களுக்கு நிறக் குறியீடுகள் அறிமுகம்

ஏப்ரல் 2 முதல் சீனி,  உப்பு, கொழுப்பின் அளவை காட்சிப்படுத்துவது கட்டாயம்

எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் பிஸ்கட் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு நிறக்குறியீடுகளை அறிமுகம் செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பால், மரக்கறி, பழவகை, அரிசி, சிறிய பைகளில் பொதி செய்து விற்கும் உணவுகள் தேநீர், கோப்பி, குடிநீர், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகள், குழந்தைகளுக்கான பால்மா என்பன இந்த நிறக்குறியீட்டு ஒழுங்குவிதிக்குள் உள்ளடங்க மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்ம உணவுகள், பாதி திண்ம உணவுகளில் அடங்கியுள்ள சீனி,கொழுப்பு மற்றும் உப்பின் அளவைஅனைத்து உற்பத்தியாளர்களும் கட்டாயம் நிறக்குறியீட்டினூடாக காட்சிப்படுத்த வேண்டும் என சுகாதார போசாக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

2016 முதல் மென்பானங்களுக்கு நிறக்குறியீடு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் பிரதான மென் பான கம்பனிகள் சீனியின் அளவை 10 வீதத்தினால் குறைத்தன.

பிஸ்கட் வகைகள் இனிப்புப் பண்டங்கள் என்பவற்றிற்கும் நிறக் குறியீடு அறிமுகம் செய்வது தொடர்பாக 2018 முதல் அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு தகவல்களைத் திரட்டியது.

இனிப்புப் பண்ட கம்பனிகள் வருடாந்தம் 80, 000 டொன் பிஸ்கட்டை சந்தைக்கு விநியோகம் செய்கின்றன. பிஸ்கட்களில் சேர்க்கும் சீனியின் அளவை குறைப்பது தொடர்பாக உற்பத்தியாளர்களுடன் பல தடவை பேச்சு நடத்தப்பட்டது. இதற்கு கம்பனிகள் உடன்பட்டுள்ள நிலையில் சர்வதேச மட்டத்தில் ஏற்கக் கூடிய நிறக்குறியீடுகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

2018 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம் பாடசாலை மாணவர்களில் 58 வீதமானவர்கள் நிறக்குறியீடு தொடர்பில் அறிந்துள்ளனர்.மென்பொருள் வாங்கும் போது நிறக்குறியீடு குறித்து 38 வீதமான மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

தொற்றா ​நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இந்த முறைமையை அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.

சீனி,உப்பு,கொழுப்பின் அளவு உணவு கட்டுப்பாடு தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் லக்ஷ்மன் கம்லத் கூறியதாவது,

ஒவ்வொரு 100 கிராமிலும் சீனியில் அளவு 22 கிராமை விட அதிகமாக இருந்தால் சிவப்பு குறியீட்டையும் 8 முதல் 22 கிராம் வரை சீனியிருந்தால் மஞ்சள் நிறகுறியீட்டையும் 8 கிராமை விட சீனி குறைவாக இருந்தால் பச்சை நிற குறியீட்டையும் பிஸ்கட் மற்றும் திண்பண்டங்களில் குறிப்பிட வேண்டும் என்றார்.

ஒவ்வொரு 100 கிராமிலும் 1.25 கிராத்தை விடக் கூடுதலாக உப்பிருந்தால் சிவப்பு குறியீடும் 1.25 முதல் 2.5 கிராம் வரை இருந்தால் மஞ்சள் குறியீட்டையும் 2.5 கிராமை விட குறைவாக இருந்தால் பச்சை நிற குறியீட்டையும் இட வேண்டும்.

கொழுப்பு தொடர்பான ஒழுங்குவிதிகளின் பிரகாரம் 17.5 கிராமை விட அதிக கொழுப்பு உள்ளடங்கியிருந்தால் சிவப்பு நிற குறியீட்டையும் 3 கிராம் முதல் 17.5 கிராம் வரை இருந்தால் மஞ்சள் நிற குறியீட்டையும் 3 கிராமை விட குறைவாக இருந்தால் பச்சை நிற குறியீட்டையும் காட்சிப்படுத்த வேண்டும்.

பால் மரக்கறி, பழவகை, அரிசி, சிறிய பைகளில் பொதி செய்து விற்கும் உணவுகள், தேநீர், கோப்பி, குடிநீர், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகள், குழந்தைகளுக்கான பால்மா என்பன இந்த நிறக்குறியீட்டு ஒழுங்குவிதிக்குள் உள்ளடங்க மாட்டாது.

பிஸ்கட் உற்பத்தியாளர்கள் முழு ஒத்துழைப்பு இலங்கை பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்,சூரியகுமார,

பிஸ்கட் மற்றும் இனிப்பு பண்டங்களுக்கு நிறக்குறியீடு அறிமுகம் செய்வது தொடர்பாக கடந்த 2 வருடங்களாக ஆராயப்பட்டது. வியாபாரிகள் என்ற வகையில் இந்த திட்டம் எமக்கு பாதகமானது என்ற போதும் மக்களின் நலன் கருதி இதனை செயற்படுத்த இனங்கியுள்ளோம் என்றார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Mon, 03/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை