காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் அமைத்ததில் மங்களவுக்கு பெரும் பங்கு

சமந்தா பவர்

 இலங்கையில் உள்ள தாய்மார்களின் துயர் தீர்க்க தாய்மார் முன்னணியை அமைப்பதில் முன்னின்றவர் மங்கள சமரவீர அத்துடன் காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதிலும் அவர் பெரும் பங்கு வகித்தார் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அமெரிக்க உயர் ஸ்தானிகர் சமந்தா பவர் கூறினார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் அவர் பிரதான உரையை ஆற்றினார்.அந்த உரையிலேயே அவர் மேற்கூறியவாறு தெரிவித்தார்.

சமந்தா பவரின் உரையில் அவர் மேலும் கூறியதாவது,

மங்களவின் 30 வருடகால அரசியல் வாழ்க்கையில இருந்து நாம் எதனைத் தெரிந்துகொள்ள முடியும் என்று பார்த்தால் எமது கால சவால்களும் அவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை நாம் அவரிடம் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

மங்களவின் வாழ்க்கையில் வேரோடியுள்ள மூன்று விடயங்கள் என்னென்ன என்று பார்த்தால் மேன்மை, நவீனமயம், ஜனநாயகம் ஆகிய மூன்றைக் குறிப்பிடலாம் என நான் நம்புகிறேன். எனவே அவரை கௌரவப்படுத்தும் வகையில் அவை மூன்றைப் பற்றியும் சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன்.

மேன்மை

மங்கள எப்படி அவரது வாழ்க்கையை ஆரம்பித்தார் என்பதை நாம் கேட்டிருக்கிறோம். அவரது சிறு வயதில் இருந்தே அவர் மக்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டினார். குறிப்பாக மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்காக வாழ்வதற்கு மட்டுமல்ல அவ்வாறான வாழ்க்கை தகுதியும் மேன்மையும் உள்ளதாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார்.

அரசியலில் பங்குபற்ற வேண்டும் என்ற எண்ணம் 1980 களின் இறுதியிலேயே அவருக்கு வந்தது. அப்போது அரசாங்கம் தென்பகுதி மார்க்சீச இளைஞர்களை அடக்கி வந்த நேரம் அவரது பிறந்த ஊரில் மின் கம்பங்களில் சடலங்கள் தொங்கின. அவரது தாய் தந்தையரை விட வித்தியாசமாக எதையாவது செய்வதற்கு மங்கள விரும்பினார். இன்று அவர் அதை செய்து காட்டியிருக்கிறார்.

நான் உங்கள் நாட்டில் சந்தித்த தாய்மாரை பற்றி நினைக்கிறேன். அவர்கள் தமது காணாமற் போன மகன்மார் மற்றும் மகள்மாரின் பழைய மங்கிப்போன படங்களை கைகளில் ஏந்தியுள்ளனர். அவர்களது அழுகைக்கு செவிசாய்க்குமாறு கதறுகின்றனர். அல்லது யுத்தத்தின் பின்னர் தமது குடும்பங்களுக்கு உணவு வழங்க அவர்களுக்கு குடும்பத்தின் தலைவர் என்ற ரீதியில் பணம் தேவைப்படுகிறது. அவர்கள் சிறிய கடனுக்கு கூட நிதி வழங்குபவர்களைத்தான் நம்பியுள்ளனர். ஆனால் அந்தநிதி வழங்குனர்களோ அவர்களிடம் அதிக வட்டியை கறந்து அக்குடும்பங்களை நிர்க்கதிக்கு உள்ளாக்குகின்றனர். எனவே அந்த குடும்பங்களுக்கு அவற்றை ஒரு போதும் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கு உதவுவதற்காக மங்கள 1990 இல் “தாய்மார் முன்னணி”யை மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து ஆரம்பித்தார். காணாமற்போனோர் தொடர்பான தகவல்களை தேடுவதற்கு இந்த முன்னணி தன்னை அர்ப்பணித்துக்கொண்டது. அத்துடன் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது.

காணாமற் போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர் மங்கள இப்போது அந்த அலுவலகம் தீவிரமாக செயற்படுகிறது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் தப்பியவர்களுக்கும் இழப்பீடு வழங்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அவர் உதவினார்.

யுத்தத்தின் பின்னர் வாழ்க்கையை ஆரம்பிக்க கடன் வாங்கியோர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களது கடன்களை அண்மையில் அவர் ரத்துச்செய்தார்.

நவீனமயம்

இரண்டாவதாக இலங்கையை நவீனமயப்படுத்துவதில் மங்கள நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த அழகான நாட்டவர் அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்.

அமெரிக்கா – இலங்கை மூலோபாய பேச்சுவார்த்தையை அவர் ஆரம்பித்து வைத்தார். அத்துடன் மிலேனியம் சவாலுக்கு அவர் இலங்கையின் விண்ணப்பத்தை முன்னெடுத்தார்.

இது நீண்டகால சிங்கல் நிறைந்த அங்கீகார நடைமுறை, எனினும் அந்த அர்ப்பணிப்பு இப்போது பயன்தர ஆரம்பித்துள்ளது. அது 480 மில்லியன் டொலர் நிதியுதவியை போக்குவரத்து மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு பெறறுத்தருகிறது.

அதேநேரம் மங்கள தபால் தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது இலங்கை தொலைதொடர்பு கைத்தொழிலை தனியார்மயப்படுத்துவதில் முன்னின்றார். அதன் பயனாக இன்று ஆசியாவில் ஒரு நபர் அதிக தொலைபேசிகளை வைத்திருக்கும் நாடாக இலங்கையை மாற்றியுள்ளது. இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனால் இருந்த போதிலும் 34 மில்லியன் தொலைபேசிகள் இங்கு பாவனையில்உள்ளன.

ஜனநாயகம்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் சிக்கலின்போது உங்கள் மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள் உங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்கவே இவ்வாறு குரல் எழுப்பப்பட்டது. அந்த குரல் கட்சி சார்பாக எழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போராட்டத்தில் பங்குபற்றிய ஒரு பெண் கூறிய கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு தாயாக ஒரு பாட்டியாக எனக்கு ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் நான் எந்தவொரு நபருக்கும் அல்லது எந்தவொரு கட்சிக்கும் எதிரானவள் அல்ல. எனினும் இலங்கையின் குடிமகள் என்ற நிலையில் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் இன்னொருவர் கூறியதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

நாம் இதனை அடுத்த சந்ததிக்காக செய்கிறோம். இந்த நாட்டின் எதிர்காலத்துக்காக செய்கிறோம் என்று கூறியிருந்தார்.

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை