புத்தளம் குப்பை விவகாரம்; கறுப்புக் கொடிகளுடன் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி நேற்று (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

"நாட்டுக்காக ஒன்றிணைவோம்" புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டத்தின் நிறைவு விழாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புத்தளம் நகருக்கு விஜயம் செய்தார்.

ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சர்வமத குழு மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பினருக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்தும், நேற்று புத்தளத்திற்கு வந்த ஜனாதிபதியை சந்திப்பதற்கு சர்வமத குழு உள்ளிட்டோருக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறும் கோரியே இந்த கறுப்புக் கொடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் காலை 8.30 மணிக்கு ஒன்று௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், குப்பைக்கு எதிரான பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை புத்தளம் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி வருகை தரவிருந்த பிரதேச செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அங்கு பதற்ற நிலை காணப்பட்டது. அங்கு விஷேட அதிரடிப்படை, கலகம் தடுக்கும் பொலிஸாரும், நீர்த் தாரை பீச்சும் கவச வாகனமும் தயார் நிலையில் இருந்தன. அத்துடன்,புத்தளம் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புத்தளம் பொலிஸார் இந்தப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக புத்தளம் நீதிமன்றத்தினால் பெற்றுக்கொண்ட தடையுத்தரவை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். எனினும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் நகர விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒன்று ௯டினர். குறித்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி கலந்துகொள்ள இருந்த போதிலும் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையால் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்டோர் விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்தனர்.

இதன் போது சக்தி விளையாட்டு மைதானத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது, அவர்களை அங்கு செல்ல விடாது, பொலிஸாரும், கலகம் அடுக்கும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தினர். இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்ட காரர்களுக்கு தடியடி பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு இளைஞர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட, புத்தளம் தினகரன் நிருபர்கள்

(படம்: ரஸ்மீன்)

 

Sat, 03/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை