கிராமிய மக்களை மேலும் கடனாளியாக்கும் திட்டம்; தாராளமய கொள்கையால் நாடு முன்னேற்றமடையாது

கிராமிய மக்களை மேலும் மேலும் கடனாளிகளாக மாற்றும் யோசனைகளையே 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் உள்ளடக்கியிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

கிராம மக்களின் கடன் சுமைகளைக் குறைப்பதற்கான எந்த யோசனைகளையும் இது கொண்டிருக்கவில்லை. மாறாக மேலும் மேலும் கடன் சுமைகளில் அவர்களை தள்ளும் வகையிலேயே வரவுசெலவுத்திட்ட யோசனைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் ஒட்டுமொத்த தொழிலாளர் வளத்தில் 28.4 வீதமானவர்கள் விவசாயத்துறையில் பணியாற்றுகின்றனர்.எனினும், இவர்கள் மொத்த உள்நாட்டு வருமானத்துக்கு வழங்கும் பங்களிப்பு 7.2 வீதமாகும். நாட்டின் தொழிலாளர் வளத்தில் நான்கில் ஒரு வீதத்தைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், அவ்வாறான எந்த யோசனைகளும் வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயத் துறையை பிரதானமாகக் கொண்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவீனத்தில் 10 வீதத்தை உணவு இறக்குமதிக்காகப் பயன்படுத்துகின்றோம்.

மரக்கறி இறக்குமதிக்காக 369 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக 319 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலவிடுகின்றோம். இவ்வாறான நிலையில் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையை வழங்கி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான யோசனைகளையாவது அரசாங்கம் முன்வைத்திருக்கலாம். ஆனால், அவ்வாறான யோசனைகள் கூட இதில் உள்ளடக்கப்படவில்லை.

2000 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டங்களை எடுத்து நோக்கினால், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான முற்போக்கான நீண்டகாலத் திட்டங்களுக்குப் பதிலாக, வீழ்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்களே முன்வைக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தை மேலும் தாராளமயமாக்கும் நோக்கில் வரவுசெலவுத்திட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தனது ஆரம்ப உரையின் போது கூறினார். நாடு ஏற்கனவே 40 வருடங்களுக்கு மேலாக தாராளமயக் கொள்கையின் தாக்கங்களை அனுபவித்து வருகின்றது. இக்கொள்கையினால் நாடு முன்னேற்றப் பாதைக்குச் செல்லவில்லையென்பது உறுதியாகியுள்ள நிலையில் மேலும் அதே திசையில் பயணிப்பதற்கு முயற்சிப்பது பலனளிக்காது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

Wed, 03/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை