தாய்லாந்தில் இராணுவ அரசுக்கு எதிராக கூட்டணி

தாய்லந்தின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக அந்நாட்டின் சில அரசியல் கட்சிகள் ஜனநாயகக் கொள்கை கொண்ட கூட்டணி ஒன்றை அறிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து, தாய்லந்தில் இராணுவ ஆட்சி நிலவி வருகிறது. 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் பொதுத் தேர்தல் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.

இராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சி எதிர்பாரா விதமாகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் காட்டுகின்றன.

அது ஆட்சி அமைப்பதைத் தடுக்க மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க திட்டம் கொண்டுள்ளன. தற்போது 94 வீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

சுமார் 7.6 மில்லியன் வாக்குகள் இராணுவத்தின் ஆதரவு பெற்ற பலாங்க பிராச்சாரத் கட்சிக்குச் சென்றதாகத் தேர்தல் அணையம் கூறியது.

ஆட்சியில் இருந்து முன்பு கவிழ்க்கப்பட்ட பியு தாய் கட்சி, பலாங்க பிராச்சாரத் கட்சியை விட சுமார் 400 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இதன்படி, தாய்லந்தின் முன்னாள் பிரதமர் தக்சினுக்கு ஆதரவான பியு தாய் கட்சி ‘ஜனநாயக முன்னணி’ எனும் கூட்டணியை அமைப்பதாக அறிவித்துள்ளது.

“இராணுவ அரசு ஆட்சியில் தொங்கிக்கொண்டிருப்பதை நாம் தடுப்போம்” என்று பியு தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளர் சுதரட் கயுர்பான் குறிப்பிட்டுள்ளார். இராணுவ அரசினால் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் முழுமையான ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பக்கட்ட முடிவு வரும் வெள்ளிக்கிழமை வெளியிடுவதாக அந்த ஆணையம் தற்போது குறிப்பிட்டுள்ளது. எனினும் புதிய தேர்தல் முறையின்படி அதிக வாக்குகள் பெற்ற கட்சியே ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை