உள்நாட்டில் நீதி வழங்காததால் சர்வதேசத் தலையீடு அதிகரிப்பு

மனித உரிமைகள் விவகாரத்தில் உள்நாட்டில் நீதி வழங்கப்படவில்லையென்பதாலேயே இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடு அதிகரித்துள்ளது என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பா அல்லது சர்வதேசத்தின் பொறுப்பா எனக் கேள்வியெழுப்பிய அவர், அரசாங்கம் உள்நாட்டில் நீதியைப் பெற்றுக் கொடுக்காதமையே ஜெனீவாவில் இலங்கைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்குக் காரணம் என்றும் கூறினார்.

சர்வதேச நீதிமன்றக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம். சர்வதேச நீதிபதிகளை நீதிப்பொறிமுறையில் உள்வாங்குவது முடிவாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை,  வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிமல் ரத்னாயக்க எம்பி இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையில் உள்ளவர்களின் மனித உரிமைகைளைப் பாதுகாப்பது இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடா அல்லது வெளிநாடுகளின் பொறுப்பா? இலங்கை அரசாங்கம் தம்மைப் பாதுகாக்கும் தரப்பினராகவே ஜெனீவாவுக்குச் செல்கின்றனர். எமது நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான பிரேரணையை நாமே ஐ.நாவுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். முடிந்தளவு மனித உரிமைகளைப் பாதுகாக்க மாட்டோம் எனக் காண்பிப்பது போன்றே இலங்கை அரசாங்கம் ஜெனீவாவுக்குச் செல்கிறது. பிழை செய்தவர்கள் போன்றே அங்கு செல்கின்றீர்கள்.

தயவு செய்து யுத்த விடயங்கள் மாத்திரமன்றி பெண்களின் மனித உரிமைகள் குழந்தைகளின் மனித உரிமைகள் எனப் பலவிடயங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச ரீதியில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளே எம்மிடம் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு கோருகின்றன. அமெரிக்கா படுகொலைகளில் ஈடுபடுகிறது என்பதற்காக எமது நாட்டிலும் படுகொலைகள், வெள்ளைவானைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கடத்தல்களில் நாமும் ஈடுபடுவோம் எனப் பிழையான தர்த்க்கத்தை முன்வைக்க முடியாது.

சர்வதேச நீதிமன்றத்தினால் நீதியை நிலைநாட்ட முடியாது. சர்வதேச நீதிபதிகளை நியமிப்பதுடன் மாத்திரம் இது நின்றுவிடாது. அதன் பின்னர் சட்டத்தரணிகள், சட்டத்துறை நிபுணர்களை சர்வதேச நாடுகளிடமிருந்து பெறவேண்டி ஏற்படும். இது முடிவடையும் விடயமல்ல எம்மை சிக்கலில் மாட்டும் விடயமாகும்.

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் உங்களின் பலவீனம் ஜெனீவாவில் வெளியாகிறது. அரசியல் நோக்கத்தில் இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது. யுத்தக் குற்றம் இடம்பெற்றிருந்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜெனீவாவுக்குச் சென்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். ஆனால், உள்நாட்டில் எந்தவொரு நபருக்கும் இதுவரை தண்டனை வழங்கவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் 11 மாணவர்களை கடத்தி கப்பம் போரிய நபர்கள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவருக்கும் இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. உயர்பாதுகாப்பு பதவிகளில் அவர்களை வைத்திருக்கின்றனர். ஏதாவது நடவடிக்கை எடுக்கும்போது தேவையற்ற அரசியல் தலையீடுகள் இடம்பெறுகின்றன.

உள்நாட்டில் நீதி வழங்கப்படவில்லையென்பதாலேயே சர்வதேசத்தினால் இலங்கை விடயத்தில் தலையிட முடிகிறது. ஜனாதிபதியும், மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து ஏற்படுத்திய சதியினால் சுயாதீனமான நீதித்துறை செயற்படுகிறது என்பதை காண்பிக்க முடிந்துள்ளது.

ஜெனீவா விவகாரம் தமிழ் மற்றும் சிங்கள அடிப்படைவாதிகளால் ஒரு வியாபாரமாக்கப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் அடிப்படைவாதிகள் ஜெனீவா விவகாரத்தை தமக்கான தேர்தல் பிரசாரமாகப் பயன்படுத்துகின்றனர். மறுபக்கத்தில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களை தமது தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்திய மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்களைக் கொள்ளையடித்த சிங்கள அடிப்படை வாதிகளும் ஜெனீவாவை தமக்கான அரசியல் தளமாகப் பயன்படுத்துகின்றனர்.

இலங்கைக்குள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுவதால் சர்வதேசத்தினால் இலகுவாகத் தலையிட முடிகிறது. நேர்மையான முறையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்படுறது. சகல விடயங்களையும் வழக்கு விசாரணைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. எனவேதான் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை