காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் உடனடியாக இடைக்கால நிவாரணமொன்றை வழங்க வேண்டுமென காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.  

இந்த நிவாரணம் தொடர்பில் தமது ஆணைக்குழு முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.   காணாமல் போனோர் அலுவலகத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் சனிக்கிழமை மாத்தறையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சாலிய பீரிஸ் இந்தக் கருத்தை முன்வைத்தார்.  

கடந்த செப்டெம்பர் மாதம் தமது அலுவலகம் வெளியிட்ட இடைக்கால அறிக்கையில், காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக வழங்கப்படவேண்டிய நிவாரணங்கள் மற்றும் அவர்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.  

குற்றவியல் ரீதியான ஆட்கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட சட்டரீதியான பரிந்துரைகளை உடனடியாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். பலவந்தமான காணாமல்போதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அண்மையில் ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.  

ஜெனீவாவை சமாதானப்படுத்துவதற்கோ அல்லது வேறு எந்தவொரு வெளித்தரப்பை சாந்தப்படுத்துவதற்கோ நடவடிக்கை எடுக்குமாறு நாம் கூறவில்லை. காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலேயே நடவடிக்கை எடுக்குமாறு வலிறுயுத்துகிறோம் என்றார்.  

மாத்தறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய திறந்துவைத்துடன், அமைச்சர் மனோ கணேசனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.  

இழப்பீடுகளை வழங்குவது தொடர்பான அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை சபாநாயகர் கரு ஜயசூரிய காணாமல் போனவர்களின் குடும்பத்துக்கு வழங்கினார். பாதுகாப்புத் தரப்பு உள்ளடங்கலாக எமது நாட்டில் திறமையான பொலிஸார் இருக்கின்றனர். அவர்களில் எவராவது குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். 

Mon, 03/04/2019 - 09:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை