பட்ஜட்; பரபரப்பு சூழ்நிலையில் நாளை வாக்கெடுப்பு

- தோற்கடிக்கப்படுமென எதிரணி சூளூரை

- வெற்றியீட்டுவோமென ஆளுந்தரப்பு உறுதி

2019வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பரபரப்பான சூழ்நிலையில் நாளை நடைபெறுகிறது.  

இதில் ஆளும் தரப்பு பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டும் என ஆளும் தரப்பு அறிவித்துள்ள அதே வேளை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கப் போவதாக எதிரணி தெரிவித்துள்ளது.  

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 5ஆம்திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டது. 6ஆம் திகதி முதல் 6நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 5.00மணிக்கு நடைபெறவிருக்கிறது.  

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையையடுத்து எந்தத் தரப்பிற்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்ற சர்ச்சை ஏற்பட்டிருந்தது.ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்குவதாக தமித் தேசிய கூட்டமைப்பு அறிவித்த நிலையில் ஐ.தே.க மீண்டும் ஆட்சியமைத்தது தெரிந்ததே.இந்த நிலையில் அரசியல் குழப்ப நிலையின் பின்னர் நடைபெறும் முதலாவது வாக்கெடுப்பே நாளை நடைபெறுகிறது.  

தமிழ்தேசிய கூட்டமைப்பின் 15எம்.பிக்களில் (சிவசக்தி ஆனந்தன் எம்.பி தவிர்ந்த) அநேகர் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காதிருக்க முடிவு செய்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலையில் அரசாங்கம் வாக்கெடுப்பில் வெல்வது கடினம் என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வெற்றியீட்டப் போவதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தினகரனுக்கு தெரிவித்தார். 

ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் பெரும்பான்மை வாக்குகளினால் சகல வாக்கெடுப்புகளிலும் வெற்றியீட்டுவது உறுதி எனவும் அவர் கூறினார்.

இரண்டாம் வாக்கெடுப்பில் தோற்றாலும் ஆட்சிமாற்றம் ஏற்படாது என்றும் எதிரணியின் முயற்சி பயனிளிக்காது என்னும் அவர் குறிப்பிட்டார்.  

இதே வேளை 2019வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எதிரணி வாக்களிக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ ஆளும் தரப்பிலுள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கோ இதனை ஆதரிக்க முடியாது எனவும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.  

1,000ரூபா சம்பள உயர்வு பெற்றுத் தருவதாகவும் முடியாவிட்டால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாகவும் அறிவித்த திகாம்பரம், மனோ கணேசன் போன்றோரினால் எப்படி வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க முடியும்.

50ரூபா பெற்றுத் தருவதாக கூறினாலும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கு நிதி ஒதுக்கப் படவில்லை என்றும் அவர் கூறினார். வாக்கெடுப்பில் தோற்றால் அரசு கலையும். இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் கூறிய அவர் ஜனாதிபதியின் நிதி ஒதுக் கீட்டை தோற்கடிக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். ஜே.வி.பியும் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.  

இதேவேளை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பதா? இல்லையா? என இன்று கூடி தீர்மானிக்க இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் தினகரனுக்கு தெரிவித்தார். 

(ஷம்ஸ் பாஹிம்) 

Mon, 03/11/2019 - 12:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை