மகாவலி அபி.திட்டத்தின் செயற்பாட்டு நிலையத்துக்கு ஜனாதிபதி விஜயம்

மகாவலி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதான அணைக்கட்டுக்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை மேற்பார்வை செய்வதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்க வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன செயற்பாட்டு நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (28) பார்வையிட்டார்.

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கமைவாக குறித்தவொரு சந்தர்ப்பத்தில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் நீர்த்தேக்கங்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இந்த நிலையத்தின் ஊடாக நீர்ப்பாசன பொறியியலாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறுவதோடு, வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்துதல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட நீர்ப்பாசன பொறியியல் தொழிநுட்பத்திற்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இந்த நிலையத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

பொல்கொல்ல, விக்டோரியா, மாதுறு ஓய, கொத்மலை, ரந்தெனிகல, மொரகஹகந்த, களுகங்கை மற்றும் நிர்மாணிக்கப்பட்டு வரும் உமா ஓய நீர்த்தேக்கம் உள்ளிட்ட மகாவலி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள் மற்றும் பிரதான அணைக்கட்டுக்களின் நீர் செயற்பாடுகள் இந்த நிலையத்தினால் கட்டுப்படுத்தப்படவுள்ளன.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் மகாவலி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தெற்காசியாவிலேயே இத்தகையதோர் நீர்த்தேக்கங்களின் செயற்பாட்டு நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sat, 03/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை