ஐ.எஸ் முகாமிட்ட பகுதி அமெரிக்க ஆதரவு படை வசம்

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழு கட்டுப்பாட்டில் இருந்த குறுகிய நிலப்பகுதியில் அது முகாமிட்டிருந்த பகுதியை அமெரிக்க ஆதரவு சிரிய போராளிகள் முழுமையாக கைப்பற்றியுள்ளனர்.

சரணடைய விரும்பாத ஐ.எஸ் போராளிகள் தெற்கில் பாகூஸ் கிராமத்தின் யூப்ரடிஸ் நதியை ஒட்டிய நிலப்பகுதிக்கு பின்வாங்கி இருப்பதாக சிரிய ஜனநாயகப் படை குறிப்பிட்டுள்ளது. எனினும் மோதல்கள் தொடர்வதாக அது கூறியது.

சிரிய போராளிகள் சிலர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோதும் மோதல் இன்னும் முடியவில்லை என்று குர்திஷ் தலைமையிலான அந்தப் படை குறிப்பிட்டுள்ளது.

பாகூஸ் கிராமம் வீழ்ச்சி அடையும் பட்சத்தில் 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் தன்னிச்சையாக அறிவித்த கலீபத் பேரரசு பிரகடனம் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் குழு ஒரு சந்தர்ப்பத்தில் சிரியா மற்றும் ஈராக்கில் 88,000 சதுர கிலோமீற்றர் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எனினும் சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் ஐந்து ஆண்டகள் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கைக்கு பின் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதி தற்போது ஒருசில நூறு சதுர மீற்றர் பகுதிக்கு சுருங்கியுள்ளது.

எனினும் எஞ்சியிருக்கும் ஐ.எஸ் போராளிகள் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மற்றும் கார் குண்டு தாக்குதல்கள் மூலம் தொடர்ந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. எனினும் கடந்த திங்கட்கிழமையாகும்போது அந்த குழு யூப்ரடிஸ் நதியை ஒட்டிய திறந்தவெளி விவசாய நிலம் ஒன்றுக்கு பின்வாங்கியது.

இந்நிலையில் முகாமிட்ட பகுதி கைப்பற்றப்பட்டதாகவும் ஐ.எஸ் குழுவினர் நதிக்கரை பகுதிக்கு பின்வாங்கியதாகவும் சிரிய ஜனநாயகப் படையின் பேச்சாளர் முஸ்தபா பாலி கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

“இது வெற்றி பிரகடனம் இல்லாதபோது ஐ.எஸ்ஸுக்கு எதிராக போராளிகளின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை