ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வு

பிரேரணையை இலங்கைக்கு சாதகமாக்கவே பேச்சுவார்த்தை

இலங்கை தொடர்பான பிரேரணையை நாட்டுக்குச் சாதகமாக அமையும் வகையில் மாற்றுவதற்குப் பேச்சு நடத்தி வருகிறோம். வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது தொடர்பில் எந்த வித உடன்பாடும் கிடையாது என சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தொழில்நுட்ப உதவிகளே பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தினப்பணிகளைத் தொடர்ந்து விசேட கேள்வியொன்றை முன்வைத்த தயாசிறி ஜெயசேகர எம்.பி.,ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அன்று இணங்கிய விடயங்களுக்கு மேலதிகமாக மேலும் யோசனையொன்றை அரசாங்கம் சமர்பிக்க எதிர்பார்க்கின்றதா? அதில் அடங்கிய விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையிலோ அல்லது அரசாங்க மட்டத்திலோ கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்த நடவடிக்கையெடுக்கப்படுமா? கடந்த காலங்களில் அமெரிக்கப் பிரேரணைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்த செயற்பாடுகளால் இறுதியில் இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகளை அழைத்து வந்து விசாரணை நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாங்கள் இங்கு நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ள தற்போதைய சூழலில் சர்வதேச நீதிபதிகளை இங்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா? என வினவினார்.

இதன் போது பதிலளித்த அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, எமது நீதித்துறை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா என்று வினவினார். நீதித்துறை மீது நூறு வீதம் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, ஒக்டோபர் 26ஆம் திகதி சட்டபூர்வமான அரசாங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றோம். இவர்கள் நீதிமன்றத்தை விமர்சித்தார்கள். இப்போது நீதிமன்றத்தை வரவேற்கின்றார்கள். என்றார். இதன் போது குறுக்கீடு செய்த தயாசிறி ஜயசேகர எம்.பி,

இந்த அரசாங்கத்தை நாங்கள் கொள்ளையடிக்கவில்லை. அரசாங்கம் தவறான பாதையில் சென்றது. அதனை சரியான பாதைக்குக்கொண்டு வரவே ஜனாதிபதி இந்த மாற்றத்தைச் செய்தார். உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பாகவும் மற்றைய நீதிபதிகள் தொடர்பிலும் எமக்கு முழு நம்பிக்கை இருக்கின்றன. நீதிமன்ற முறைமை தொடர்பாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. 2015ஆம் ஆண்டில் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்த போது வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து எமது இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. அவ்வாறானால் எமது நீதிமன்றங்கள் தொடர்பாக அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையா? என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கிரியெல்ல, கடந்த ஆட்சி காலத்தில் இவர்கள் பிரதம நீதியரசரை பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை கொண்டு வந்து 24 மணி நேரத்திற்குள் பதவி விலக்கினார்கள். இவ்வாறாக செய்தவர்கள் சர்வதேசத்திற்கு ஏசுகின்றார்கள். இந்த நிலைமை 2015ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. 2012 , 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. 2015இல் இவர்கள் வெற்றி பெற்றிருந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை சமநிலைப்படுத்தியதோடு சர்வதேசத்துடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். . எமது இராணுவத்தினர் தொடர்பாகவோ மற்றையவர்கள் தொடர்பாகவோ நடவடிக்கையெடுக்க சர்வதேச நீதிபதிகளுக்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை . சரத் பொன்சேகாவை இழுத்துச் சென்று சிறையில் அடைத்தவர்கள் தான் இன்று இராணுவம் பற்றி பேசுகிறார்கள்.

இதன் போது மீண்டும் குறுக்கீடு செய்த தயாசிறி ஜயசேகர எம்.பி, 2015ஆம் ஆண்டில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவுடன் இணைந்து மங்கள சமரவீர யோசனையை முன்வைத்தார். இங்குள்ள நீதிமன்றத்தினூடாக இராணுவத்தினர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக் கூடிய நிலைமை உள்ளது.ஆனால் சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரணைகளை நடத்தி சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதன்படி இந்த யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலான இன்றைய யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இல்லையென்றால் வேறு யோசனையா சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதா என்றார்.

(ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்)

***********************

பிரேரணையை அமுல்படுத்த ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல்

அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் 2015 ஜனவரி முதல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறையுடன் ஆக்கபூர்வமாக  செயற்படுவதாக உயர் ஸ்தானிகர் பல முறை கூறியிருக்கிறார். எவ்வாறாயினும் இந்த ஆக்கபூர்வமான கூட்டிணைவு மூலம் முக்கிய அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் 2017 மார்ச்சில் கூறுகிறார். மனித உரிமைகள் கவுன்சிலின் 30/1 என்ற தீர்மானத்தின் கீழ் செய்யப்பட்ட தற்காலிகமான சட்டக் கடப்பாடுகள் ஒரு வருடத்துக்கு மேலாக நிறுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன. நம்பிக்கையை கட்டியெழுப்பும் சில நடவடிக்கைகள் மூலமான முன்னேற்றம் போதுமானதாக இல்லை. என்பதுடன் அது முடிவில்லாமலும் உள்ளது. அத்துடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொண்ட கட்டமைப்பு ஒன்றுதிரட்டப்படவில்லை என்பதுடன் இதனை முன்னகர்த்துவதற்கு போதுமான அரசியல் ஆதரவு கிடைக்கவில்லை.

இலங்கையில் இடம்பெறும் கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகளாக காணப்படும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்பாக இரட்டை நடைமுறை பின்பற்றப்படும் சட்ட முறைமையையே காண முடிகிறது. 2017 செப்டம்பர் 7 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு வழக்கு மனித உரிமை மீறல் பற்றியது அல்ல. ஆனால் அரசாங்க அதிகாரிகளின் மீதான ஒரு மோசடி வழக்கு, இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவர். அதில் ஒருவர் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர். மற்றவர் தொலைத்தொடர்புகள் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம். அவர்கள் இருவரும் சிறைக்குச் சென்ற சில மணி நேரத்தில் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். சுகவீனமுற்றதால் அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாதாரண கைதிகள் தமக்கு சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக கூறுகின்றனர். தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவது கூட சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 20 ஆம் திகதி மேற்படி குற்றவாளிகள் இருவரும் ‘விதி விலக்கான சூழலின் கீழ்’ அவர்களை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிணையில் விடுவிக்கிறார். அவர்களுக்கான மூன்று வருட சிறைவாசத்தில் 13 நாட்கள் மட்டுமே அவர்கள் சிறையில் இருந்துள்ளனர்.

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் 10 வருடங்களுக்கு மேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் அதற்கு மேலும் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிலையில், மேற்படி அரச அதிகாரிகள் மீது சலுகை காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

2015 முதல் வெளியிடப்பட்ட கூற்று மற்றும் அறிக்கைகளில் பொறுப்புக் கூறல் மற்றும் சீர்திருத்தம் தொடர்பான முன்னேற்றம் போதாதிருப்பது பற்றிய தனது கருத்தை உயர் ஸ்தானிகர் பதிவுசெய்கிறார். பொதுவான மனித உரிமைகள் நிலைப்பாட்டின் சாதக அபிவிருத்தியை ஊக்கப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார். எவ்வாறெனினும் 2017 இல் இடைக்கிடை இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான மோதல்கள், பதற்றம் மற்றும் சிறுபான்மையோர் மீதான தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்படடதாகத் தெரியவில்லை. கவலைதரும் இவ்வாறான பலவற்றை அரசாங்கத்துக்கு சாதகமான வழியில் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது. இதுபோன்ற வன்முறைகள் 10 வருடங்களுக்கொருமுறை என்ற வகையில் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கிறது. வெறுப்பு பேச்சு, சமூக ஊடகங்களுக்கூடான தவறான தகவல் வழங்கல் மற்றும் அரசியல் கையாளல் ஆகியவை இதற்கு துணைபோகின்றன.

சித்திரவதை மற்றும்கடுமையான கண்காணிப்பு மற்றும் முக்கியமான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் போதிய முன்னேற்றம் இல்லாமை உதாரணத்துக்கு காணி கையளிப்பு, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல் மற்றும் அச்சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ள வழக்குகள் ஆகியவை அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளை முன்னெடுக்கும் அம்சங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

இலங்கையில் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முக்கிய விடயத்தில் மனித உரிமை கவுன்சில் தொடர்ந்து சீரிய பங்களிப்பினை வழங்க வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் வலியுறுத்துகிறார். அதேநேரம் அங்கத்துவ நாடுகள் வேறு மார்க்கங்களையும் பரிசீலிக்க வேண்டும். சர்வதேச நீதி முறை உள்ளிட்ட வழிமுறைகள் பொறுப்புக்கூறலை மேம்படுத்த முடியுமா என்பதை அவை பரிசீலிக்க வேண்டும் என்று உயர் ஸ்தானிகர் கூறியுள்ளார்.

 

Sat, 03/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை