அஷ்ரஃப் கலர்ஸ் டே நிகழ்வில் அஷ்ரஃப் ஸ்டார்ஸ் அணி சம்பியன்

அட்டாளைச்சேனை அஷ்ரஃப் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு வீரர்களையும், கழக உறுப்பினர்களையும் கழகத்தின் அனைத்து ஆதரவாளர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான 'அஷ்ரஃப் கலர்ஸ் டே' அண்மையில் (17) ஆலம்குளம் றஹ்மானியா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. கழகத்தின் தலைவர்எஸ்.எம்.நிஸாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் கெளரவ அதிதியாகவும், பிரதேச சபை உறுப்பினர்களான யூ.கே.ஆதம்லெப்பை, தமீம் ஆப்தீன் உள்ளிட்ட பலர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் பிரதான நிகழ்வாக கழக உறுப்பினர்கள் நான்கு அணிகளாக (அஷ்ரஃப் ஸ்கோர்ச்சர்ஸ், அஷ்ரஃப் ஸ்ட்ரைக்கர்ஸ், அஷ்ரஃப் ஸ்டார்ஸ், அஷ்ரஃப் சிக்ஸர்ஸ்) பிரிக்கப்பட்டு கிரிக்கட் லீக் சுற்றுத் தொடரும் இடம்பெற்றது.

அந்த வகையில் இறுதிப் போட்டிக்கு அஷ்ரஃப் ஸ்கோர்ச்சர்ஸ் அணியினரும், அஷ்ரஃப் ஸ்டார்ஸ் அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர். முதலில் துடுப்பெடுத்தாடிய அஷ்ரஃப் ஸ்கோர்ச்சர்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 37 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். பதிலெடுத்து துடுப்பெடுத்தாடிய அஷ்ரஃப் ஸ்டார்ஸ் அணியினர் சாஜஹானின் அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியிலக்கை அடைந்தனர்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஷ்ரஃப் ஸ்டார்ஸ் அணியின் சாஜஹான், தொடராட்ட நாயகனாக அதே அணியின் வீரர் நுஸ்கி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

வெற்றியீட்டிய அணியினருக்கு வெற்றிக் கிண்ணமும் ரூபா 10,000 பணப்பரிசும் வழங்கப்பட்டது, இரண்டாமிடம் பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணமும், ரூபா 5,000 பணப்பரிசும் வழங்கப்பட்டன.

(பாலமுனை விசேட நிருபர்)

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை