சிரியாவின் ஐ.எஸ் பகுதியில் இருந்து பெரும் எண்ணிக்கை போராளிகள் சரண்

சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கடைசி நிலப்பகுதியில் இருந்து அந்த போராளிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியதாக அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படை குறிப்பிட்டுள்ளது.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு சிரியாவின் பாகூஸ் கிராமத்தில் இருந்து சரணடைய வருபவர்களுக்காக குர்திஷ் தலைமையிலான படையினரால் உருவாக்கப்பட்ட மனிதாபிமான பாதை ஊடாக கடந்த திங்கட்கிழமை சுமார் 3,000 பேர் வெளியேறி வந்ததாக சிரிய ஜனநாயகப் படையின் முஸ்தபா பாலி ட்விட்டர் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வெளியேறியவர்களில் பெரும் எண்ணிக்கையிலான ஐ.எஸ் போராளிகள் எமது படையிடம் சரணடைந்ததாக பாலி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த சிறு நிலப்பகுதி மீதான தாக்குதல்களை அமெரிக்க ஆதரவுப் படை குறைத்துக் கொண்ட நிலையிலேயே பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இவ்வாறு வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில் ஐ.எஸ் பகுதியில் எஞ்சியுள்ள பொதுமக்கள் மற்றும் போராளிகளின் எண்ணிக்கை பற்றி தெளிவின்றி உள்ளது. எனினும் அந்த எண்ணிக்கை பல நூறுகளாக இருக்கும் என்று உள்நாட்டு செயற்பாட்டாளர்கள் கணித்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் ஐ.எஸ் பகுதியில் இருந்து 10,000க்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறும் முகத்தை மறைத்த கறுப்பு பர்தா அணிந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் டிரக் வண்டிகளில் ஏற்றப்பட்டு வடக்காக அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு ஐ.எஸ் சந்தேக நபர்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

வடகிழக்கு சிரியாவில் உள்ள இந்த அல் ஹோல் முகாமின் சேவைகள் பலவீனமாக இருப்பதாக செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் ஆரம்பம் தொடக்கம் 34,000இல் இருந்து 45,000 ஆக தற்போது அதிகரித்துள்ளதாக செம்பிறை சங்க அதிகாரி ரொபர்ட் மார்டினி குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாமிற்கு நாளாந்தம் முடிவின்றி பெண்கள் மற்றும் சிறுவர்களை பிரதானமாகக் கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகூசி கிராமத்தில் இருந்து இவ்வாறு வருபவர்கள், சுகவீனம், காயம், களைப்புடன் இருப்பதாகவும் அந்த முகாம் நிரம்பி வழிவதாகவும் மார்டினி குறிப்பிட்டார்.

இதில் மனிதாபிமான உதவிகள் மட்டுமன்றி ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வருபவர்களை அவர்களது சொந்த நாடுகள் ஏற்பது குறித்த விவகாரமும் அதிக சிக்கல் கொண்டது என சர்வதேச செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை