தென்னாபிரிக்காவுடனான தொடரை முழுமையாக இழந்த இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ரி 20 போட்டியிலும், துடுப்பாட்ட வீரர்களின் கவனயீனமான ஆட்டத்தின் காரணமாக இலங்கை அணி தோல்வியை தழுவியதுடன், ரி 20 தொடரையும் 0--3 என முழுமையாக இழந்துள்ளது.

ஜொஹன்னெஸ்பேர்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியது. இதன்படி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி டவைன் ப்ரிட்டோரியர்ஸின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய எய்டன் மர்க்ரம் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்காக இருவரும் 37 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் எய்டன் மர்க்ரம் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களத்தில் ஜோடி சேர்ந்த டவைன் ப்ரிட்டோரியர்ஸ் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் இலங்கை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 90 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், இருவரும் அரைச்சதங்களையும் கடந்தனர். இதில், 52 பந்துகளில் 66 ஓட்டங்களை விளாசிய ரீஸா ஹென்ரிக்ஸ் ஜெப்ரி வெண்டர்சேவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்க அணி 127 ஓட்டங்களுக்கு தங்களுடைய இரண்டாவது விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஜேபி டுமினி, ப்ரிட்டோரியர்ஸுடன் இணைந்து அணியின் இன்னிங்சை நிறைவுக்கு கொண்டு வந்தார். இருவரும் 77 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், ரி 20 கிரிக்கெட்டில் கன்னி அரைச்சதத்தை கடந்த ப்ரிட்டோரியர்ஸ் 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மறுமுனையில், ஜேபி டுமினி 14 பந்துகளுக்கு 34 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் சவாலான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் கவனயீன ஆட்டத்தின் காரணமாக 15.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் ஆரம்பத்தில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய நிரோஷன் டிக்வெல்ல 22 பந்துகளில் 38 ஓட்டங்களை விளாசி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியிருந்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 4.1 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்த நிலையில், 96 ஓட்டங்களுக்கு இலங்கை அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் பின்னர் தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இசுரு உதான நம்பிக்கை கொடுக்க 11.1 ஓவர்களில் இலங்கை அணி 111 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டம் ஆரம்பிக்க, டக்வத் லுவிஸ் முறையில் இலங்கை அணிக்கு 17 ஓவர்களில் 183 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இசுரு உதான வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்ட போது, பெஹலுக்வாயோவின் பந்து வீச்சில் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் ஓய்வறை திரும்பினர். இதன்படி இலங்கை அணி 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வியடைந்ததுடன், தொடரையும் 0--3 என இழந்தது. தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் எண்டைல் பெஹலுக்வாயோ 4 விக்கெட்டுகளையும், ஜுனியர் டலா மற்றும் லுதோ சிபம்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரில் முதல் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2--0 என இலங்கை அணி கைப்பற்றியிருந்த நிலையில், ஒருநாள் மற்றும் ரி 20 தொடர்களை தென்னாபிரிக்க அணி முறையே 5--0, 3--0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 03/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை