இணைந்து செயற்படுவதற்கு ஜே.வி.பி - கூட்டமைப்பு இணக்கம்

அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகார ஒழிப்பில் இருதரப்பும் ஒருமித்த கருத்து

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பொதுவான விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணங்கியுள்ளன.

நாடு மற்றும் நாட்டு மக்கள் பற்றிச் சிந்தித்து சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தவும், சரியான பாதையில் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல இணங்கக் கூடிய துறைகளில் இணைந்து செயற்படவும் இவ்விரு கட்சிகளும் உடன்பட்டன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜே.வி.பிக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, டி.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் மத்திய குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் ஆழமாகப் பரிசீலித்தோம். அது மாத்திரமன்றி நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும், தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றி ஆராய்ந்ததுடன், நாட்டின் எதிர்காலத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பது பற்றியும் விரிவாகக் கலந்துரையாடினோம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாம் அண்மையில் நடத்திய சந்திப்புக்களில் அதிகாரப் பகிர்வு பற்றி ஆராயப்பட்டது. அவற்றில் இணங்கப்பட்ட விடயங்களுக்கமைய சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. அவை பற்றியும் தாம் ஜே.வி.பியினருக்கு விளக்கமளித்து, அவர்களின் ஒத்துழைப்பைக் கோரியதாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இரு கட்சிகளுக்கும் இடையில் சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவாக இணங்கக் கூடிய துறைகளில் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் எம்மால் தயாரிக்கப்பட்ட 20ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியுள்ளது. எனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்து இதனை விவாதிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 17 திருத்தங்களோ மக்களின் அனுமதியைப் பெறப்படாமல் கொண்டுவரப்பட்டவையாகும். எனினும் 20ஆவது திருத்தச்சட்டமூலம் மக்களின் அனுமதியைப் பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இந்த நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்காமல் அல்லது அது பற்றிய முடிவை எடுக்காமல் நாட்டிலுள்ள 1 கோடியே 50 இலட்சம் வாக்காளர்கள் தீர்மானிப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை