பன்சேனை பாரி மகளிர் உதைபந்தாட்ட அணி சம்பியன்

பன்சேனை பாரி வித்தியாலயத்தின் மகளிர் உதைபந்தாட்ட அணியினர் இரண்டிற்கு பூச்சியம்(2-0)என்ற கோல்களின் அடிப்படையில் வெற்றி வாகை சூடிக்கொண்டு சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மகளிர் அமைப்புக்கள் மற்றும் அரங்கம் ஏற்பாட்டில் 'மாபெரும் மகளிர் உதைபந்தாட்ட சமர்' மட்டக்களப்பு மேலதிக அரச அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

இச்சமரானது அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயம் மற்றும் பன்சேனை பாரி வித்தியாலத்திற்கும் இடையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன்(காணி),வலயக்கல்வி, பணிப்பாளர் செல்வி.

அகிலா கனகசூரியம், உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்,பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தட்சணாகௌரி தினேஸ், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதி முதல்வர் கே.சத்தியசீலன், மாவட்ட விளையாட்டு அதிகாரி வீ.ஈஸ்பரன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரங்கம் நிறுவனத்தின் பணிப்பாளருமான பூபாலரெட்ணம் சீவகன் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விரு பாடசாலை அணிகளும் முதலில் நாணய சுழற்சியில் ஈடுபட்டது. நாணய சுழற்சியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் வெற்றி பெற்று ஆட்டத்தில் ஈடுபட்டது.

ஆட்டத்தின் இறுதியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அணியை எதிர்த்தாடிய பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் இரண்டு(2)கோல்களை உட்புகுத்தி வெற்றிவாகை சூடினர். இரண்டு அணிகளும் உத்வேகத்துடன் ஆடி சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டது.

இச்சுற்றுப் போட்டியில் விளையாடிய பாடசாலை உதைபந்தாட்ட மகளிர் அணிகளுக்கு அரங்கம் நிறுவனம்,மாவட்ட செயலகம் மகளிர் சம்மேளனங்கள் பதக்கம் அணிவித்தும்,பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்கள்.

(மட்டக்களப்பு சுழற்சி,வெல்லாவெளி தினகரன் நிருபர்கள் )

Sat, 03/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை