மொழிப்பிரச்சினைக்கு தீர்வு காணாதவரை தேசிய நல்லிணக்கம் பேசுவது வேடிக்கை

மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் மொழிப் பிரச்சினைக்கு தீர்வுகளை காணாதவரை தேசிய நல்லிணக்கத்திற்காக எதை எதையெல்லாமோ செய்துவருவது வேடிக்கையானதென ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என எமது மக்கள் அடிப்படை, அன்றாட, அபிவிருத்தி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நிறுவனங்களை எல்லாம் ஒன்றாகக் கொண்டிருக்கின்ற ஓர் அமைச்சு தற்போது செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்த அமைச்சுக்கு பாரிய பொறுப்புக் கூறல்களின் கடமைப்பாடு இருக்கின்றது. 

தற்போது இந்த நாட்டில் ‘பொறுப்புக் கூறல்” பற்றி அதிகமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அந்தப் பொறுப்புக் கூறலிலும் அதி முக்கியமான பொறுப்புக் கூறலை ஏற்க வேண்டிய பொறுப்பும் இந்த அமைச்சுக்கு இருக்கின்றது. 

மேற்படி அரச நிறுவனங்களில் எமது மக்கள் - தமிழ் பேசுகின்ற மக்கள் முகங்கொடுத்து வருகின்ற மொழிப் பிரச்சினை காரணமாக, எமது மக்கள் தங்களது தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றிக் கொள்ள இயலாது நீண்ட காலதாமதங்களுக்கும், பாரிய இடையூறுகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இது இன்று நேற்றல்ல, மிக நீண்ட காலமாகவே தொடருகின்ற ஒரு பிரச்சினையாகும். 

சிங்கள மொழியும், தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாதல் வேண்டும் என இலங்கை அரசியல் அமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் 18(1) மற்றும் 18(2) உறுப்புரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்று அரசியலமைப்பிற்கான 16ஆவது திருத்தத்தில் 22(1)ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளது. 

உதவி அரசாங்க அதிபரின் பிரிவொன்றை உள்ளடக்கும் கூறு எதனதும் சனத்தொகை சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மை சனத்தொகை என்ன விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ, அதனைக் கருத்திற் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தில் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்படும் மொழி தவிர்ந்த ஒரு மொழி அத்தகைய இடப்பரப்புக்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தலாமென ஜனாதிபதி பணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  

அரசியலமைப்பிற்கான 16ஆவது திருத்தத்தில் 22(1) ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ள நிலையில்,  

இந்த ஏற்பாடுகளை இதுவரையில் ஒழுங்குற நடைமுறைப்படுத்தாத அரசாங்கம், தேசிய நல்லிணக்கம் எனக் கூறி, எதை எதையெல்லாமோ செய்து வருவதாகக் கூறுவது வேடிக்கையானதாகவே இருக்கின்றது என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

Fri, 03/29/2019 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை