தெல்தோட்டை நீர்வழங்கல் திட்டம்; இந்த வருடத்துக்குள் ஆரம்பம்

தெல்தோட்டைக்கு குடிநீர் வழங்குவதிலுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், 12மில்லியன் யூரோ செலவில் கலஹா – தெல்தோட்டை நீர் வழங்கல் திட்டத்தை இந்த வருடத்துக்குள் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  

கண்டி, தெல்தோட்டை பிரதேசத்திலுள்ள முப்பது வீட்டுத்திட்டத்தில் நேற்று முன்தினமிரவு (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், தெல்தோட்டை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும். முழு தெல்தோட்டைக்கும் குடிநீர் வழங்கும் நோக்கில் லூல்கந்துர நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப்பெற்று, கலஹா தொடக்கம் தெல்தோட்டை வரை சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான முயற்சிகளை நாங்கள் பல தடவைகள் மேற்கொண்டோம்.   ஆனால், ஹங்குரங்கெத்த பிரதேசத்திலுள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் காரணமாக நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெறமுடியாத ஒரு சூழ்நிலை காணப்பட்டது. இப்போது நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தி, அந்தப் பிரச்சினை ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.  

இந்நிலையில், ஒஸ்ரியா அரசாங்கத்திடம் 12 மில்லியன் யூரோவை கடனாகப் பெற்று கலஹா – தெல்தோட்டை குடிநீர் வழங்கல் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. தற்போது இதற்கான கேள்விகோரல் பத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வருடத்துக்குள் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம்.   இதுதவிர, குடிநீர் வசதிகள் இல்லாத கிராமங்களில் அங்குள்ள நீரை சுத்திகரித்து வழங்குவதற்கான ஒரு திட்டத்தையும் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். தேசிய சமூக நீர் வழங்கல் திட்டத்தினால் அமுல்படுத்தப்படும் ‘பிரஜா ஜல அபிமானி’ என்ற இத்திட்டத்தின் மூலம் இந்த வருடத்துக்குள் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 1000 கிராமங்களுக்கு குடிநீர் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.  

கண்டி மாவட்டத்தில் 52 கிராமங்களில் இத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. தெல்தோட்டை பிரதேசத்தில் மாத்திரம் இத்திட்டத்துக்கென 100–150 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து, சிறிய நீர்வழங்கல் திட்டங்கள் பலவற்றை குறுகிய காலத்துக்குள் செய்துமுடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம்.  

தெல்தோட்டை முப்பது வீட்டுத்திட்டத்திலுள்ள அல்மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலுக்கு ஒரு தொகை நிதியை ஒதுக்கமுடிந்தது சந்தோசமளிக்கிறது. எதிர்காலத்தில் எங்களால் முடியுமான சகல உதவிகளையும் இப்பள்ளிவாசலுக்கு செய்வோம். அத்துடன் இக்கிரமத்தின் அபிவிருத்திகளுக்கும் எனது அமைச்சின் மூலம் நிதியொதுக்கீடுகளை செய்துதருவேன் என்றார். 

Tue, 03/19/2019 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை