இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டி: தென்னாபிரிக்கா இலகு வெற்றி

தென்னாபிரிக்காவுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-–0 என முன்னிலை பெற்றுள்ளது.  

ஜொஹன்னஸ்பேர்க், வொண்டரஸ் அரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சோபிக்கத் தவறியது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 23 ஓட்டங்களுக்கே ஆரம்ப விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  

எனினும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை அதிகரிக்க முயன்றனர். சிறப்பாக ஆடி வந்த குசல் பெரேரா 33 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். தனது கன்னி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஓஷத பெர்னாண்டோ வேகமாக ஆடி 49 ஓட்டங்களை பெற்ற நிலையில் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.  

இந்நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா 94 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு வலுச் சேர்த்தனர். எனினும் இந்த இருவரையும் இம்ரான் தாஹிர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்ததை அடுத்து இலங்கை அணியின் ஓட்ட வேகம் சரிய ஆரம்பித்தது.  

குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களையும் பெற்றனர். கடைசி வரிசை வீரர்கள் வேகமாக விக்கெட்டுகளை பறிகொடுக்க இலங்கை அணி 47 ஓவர்களில் 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனது 40 வயதை நெருங்கி இருக்கும் இம்ரான் தாஹிர் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  

தொடர்ந்து பதிலெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டை 14 ஓட்டங்களுக்கு இலங்கை அணியால் வீழ்த்த முடிந்தபோதும் மறுமுனையில் ஆடிய ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக் மற்றும் அணித்தலைவர் டு பிளசிஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு 136 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு தென்னாபிரிக்க அணியின் வெற்றியை இலகுவாக்கினர். டி கொக் 81 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தபோதும். டு பிளசிஸ் தென்னாபிரிக்க அணியின் வெற்றி வரை களத்தில் இருந்து 112 ஓட்டங்களை குவித்தார்.  

இறுதியில் தென்னாபிரிக்க அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.  

Mon, 03/04/2019 - 12:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை