மனிதன் – யானை மோதல்

ஹம்பாந்தோட்டையில் மனிதன்- –யானை மோதல் காரணமாக கடந்த இரண்டு மாத காலத்துக்குள் மூன்று மனிதர்களும், மூன்று யானைகளும் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை  வன  ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

இக் காலப் பகுதியிலேயே கூடுதலான யானைகளும், மனிதர்களும் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இவ் வருடத்தின் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மத்தலை பிரதேசத்தில சட்ட விரோதமான முறையில் இடப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளதோடு, ஜனவரி மாதம் 28ஆம் திகதி ஹம்பாந்தோட்டை கெடன்வெவ பிரதேசத்தில் துப்பாக்கி காயங்களுக்கு உள்ளாகி யானையொன்று உயிரிழந்தது.   அதேவேளை ஹம்பாந்தோட்டை கரமெடிய பிரதேசத்திலும் மின் கம்பியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்தது.  

அத்தோடு காட்டுப் பிரதேசத்தில் மேலும் பல யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் ஹம்பாந்தோட்டை வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.   யானை தாக்குதலுக்கு உள்ளாகி இவ் வருடத்தில் ஜனவரி மாதம் 07ஆம் திகதி சூரியவெவ மஹஆர பிரதேசத்தை சேர்ந்த 54வயதான மானகே பியசிரி என்ற நான்கு குழந்தைகளின் தந்தை, பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி பல்லேமலல வெலிகத்தை பிரதேசத்தைச் சேர்ந்த எ. எச். குணபால என்ற 71வயதான ஆறு குழந்தைகளின் தந்தை, கடந்த 03ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சுவர்ணமாலி குளத்திற்கு அருகாமையில் வில்மட் லியனகே என்ற 73வயதான முதியவர் என இதுவரை யானை தாக்குதலினால் மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.  

யானைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காட்டு பிரதேசத்தை​ ஒதுக்காமல் அப்பிரதேசத்தில் காணப்படும் காடுகளை அழித்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக பயன்படுத்தியமையே மனிதன்- – யானை மோதலுக்கு காரணமென வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.  

 இதனை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகள் கிராமங்களை சுற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றினை உடைத்து யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து விவசாயத்திற்கும் மனிதர்களுக்கும் சேதம் விளைவிப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்)

Wed, 03/13/2019 - 08:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை