பெண்களை கண்காணிக்கும் சவூதி செயலியை நீக்க கூகுள் மறுப்பு

பெண்களை கண்காணிக்க சவூதி அரேபியாவால் உருவாக்கப்பட்ட ஆப்செர் என்ற சர்ச்சைக்குரிய செயலியை தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.

இது சவூதியில் இருக்கும் ஆண்கள் பெண்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க உதவுகிறது. இந்த செயலி பற்றிய புகார்களைத் தொடர்ந்து அதை விசாரித்த கூகுள், ஒப்பந்தங்களை எந்தவிதத்திலு இந்த செயலி மீறவில்லை என்பதால், அதை பிளே ஸ்டோரிலிருந்து நீக்க முடியாது என தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களும் இந்த செயலியை நீக்க வேண்டும் என நிர்பந்தித்திருந்தனர். இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஆப்செர் செயலியை ஆராய்ந்து வருகிறது. ஆனால் தொடர்ந்தும் ஆப்பிளின் செயலிகள் ஸ்டோரிலிருந்து ஆப்செரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூகுள் மற்றும் ஆப்பிளின் செயல்பாடுகளும், பதில்களும் அதிருப்தி அளிப்பதாக அமெரிக்க கீழவை பிரதிநிதி ஜக்கி ஸ்பையர் தெரிவித்துள்ளார். ஆப்செரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஆப்செர், அடக்குமுறைக்கான செயலியாக செயல்படுவதாக பல பெண்கள் உரிமை அமைப்புகளின் விமர்சனங்களை சந்தித்துள்ளது. முதன்மையாக இந்த செயலி, சவூதி குடிமகன்கள், அரசின் சேவைகளை பெறுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின், புலம் பெயர்ந்து வேலை செய்பவர்களின் நடவடிக்கைகளையும் அவர்கள் கடவுச்சீட்டு தகவல்களை வைத்து கண்காணிக்க உதவுகிறது.

அவர்கள் எங்கு பயணப்படுகிறார்கள், எவ்வளவு நேரம் பயணம் உள்ளிட்ட தகவல்களுடன் அவர்கள் எங்கு செல்ல வேண்டும், செல்லக் கூடாது என கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம்.

சவூதியில் இந்த செயலி தொடர்பாக கலவையான விமர்சனங்கள் உள்ளன.

ஒருவர் இந்த செயலிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “எப்படியாக இருந்தாலும், ஆண்களின் அனுமதி பயணிப்பதற்கு தேவை. இந்த செயலி அதனை சுலபமாக ஆக்குகிறது” என பதிவிட்டுள்ளார்.

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை