ஜெனீவா அமர்வில் பங்கேற்க இலங்கை சார்பில் மூவர் குழு

எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்ப்போம்; அழுத்தம் வேண்டாம்

ஜெனீவா அமர்வில் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்காக மூவர் கொண்ட தூதுக் குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ​பேரவையின் 40ஆவது அமர்வில், எதிர்வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் இலங்கை விடயம் விவாதிக்கப்படவுள்ளது. எனவே, இம்முறையும் மூவர்கொண்ட பிரதிநிதிகள் குழுவைத் தாம் அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, இலங்கை விடயத்தை ஏற்கனவே கையாண்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவதாக ஜனாதிபதி நேற்று (06) அறிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை அறிவித்தார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான சிக்கலை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்குச் செய்யும் பரிந்துரைகளை எவ்வித அழுத்தமுமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்குமாறு கோருவதற்கே மூவர் கொண்ட தூதுக்குழுவைத் தாம் அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார்.

பழைய விடயங்களைக் கிளறிக் ெகாண்டிருப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, நல்லிணகத்தையும் சமாதானத்தையும் நிரந்தரமாக கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜெனீவாவில் புதிய பிரரேணைக்கு இலங்கை கைச்சாத்திட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கின்றது. இந்நிலையில் மூவர் கொண்ட குழுவை அனுப்புவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? என்று ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், அவ்வாறு எந்தத் தகவலும் தமக்குத் தெரியாது என்றும், நாட்டின் வெளிவிவகார கொள்கை தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அதற்குப் புறம்பாக செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றதா? என்பதை ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் இழைக்கவில்லை என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் விபரித்திருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஜனாதிபதி, இராணுவத்தினரை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜெனீவா அமர்வு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஓர் அறிக்ைகயில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கான கால எல்லையை விஸ்தரிப்பதற்கு இலங்கை கால அவகாசத்தை நாடுவதாகத் தெரிவித்துள்ளது.

விசு கருணாநிதி

Thu, 03/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை