சிவநகர் மாதிரிக்கிராம வீட்டுத்திட்ட வேலைகள் ஆரம்பம்

கிளிநொச்சி சிவநகர் மாதிரிக்கிராமத்திற்கான வீடமைப்புத் திட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சஜித்பிரேமதாசாவினால் முன்னெடுக்கப்படும் 'கிராமத்திற்குக் கிராமம் வீட்டுக்கு வீடு' என்னும் வீடமைப்புத் திட்டத்தினூடாக, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கோரிக்கைக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் தலா ஒரு வீட்டுக்கு750,000 ரூபா பெறுமதியில் விசேடமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரிக்கிராம வேலைத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி சிவநகர் கிராமத்தில் அமையப் பெறவுள்ள 28 வீடுகளை உள்ளடக்கிய மாதிரிக் கிராமத்திற்கான வீடமைப்புப் பணிகள் நேற்றைய தினம்(04)ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால், நாடளாவிய ரீதியில் வீடற்றவர்களுக்கு ரூபா 550,000 பெறுமதியான வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளப் பெருக்கு அதனால் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்பட்டிருந்த வேளையில், அதனை அறிந்து மக்களைப் பார்வையிடுவதற்காக கிளிநொச்சிக்கு வருகைதந்த தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசாரத்துறை அமைச்சர்சஜித்பிரேமதாசாவினால், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலின் போது, கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், 'கிளிநொச்சி மாவட்டத்தில் தங்களது அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள 550,000 ரூபா பெறுமதியான வீடமைப்புத் திட்டத்தில், ஏற்கனவே யுத்தத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போதும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பயனாளிகளான இம்மக்களுக்கு 750,000 ரூபாவாகஅதிகரிப்புச் செய்து வீடமைப்புத் திட்டத்தை வழங்க முன்வருமாறு' கோரப்பட்டதை உடனடியாகவே ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதனை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விசேடமாக முன்னெடுப்பதாகக் கூறியிருந்தார்.

அதனடிப்படையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடமைப்புத் திட்டப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மற்றும் சில பகுதிகளில் வீடுகள் முழுமையாகப் பூர்த்தியாக்கப்பட்டு ஓரிரு தினங்களில், மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உருத்திரபுரம் சிவநகர் கிராமத்தில், தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசாரத்துறை அமைச்சின் மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள 28 வீடுகளுக்குமான அத்திவாரம் இடுவதற்கான ஆரம்பகட்ட நிகழ்வுகள் நேற்று காலையில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் க.கணேசலிங்கம் தலைமையில் சம்பிரதாய முறைப்படி நடைபெற்றன. இந்நிகழ்வில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட திட்ட முகாமையாளர் த.சுபாஸ்கரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருத்திரபுரம் பிரதேச அமைப்பாளர் பா.எழில்வேந்தன்எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(சின்னராசா செய்வேந்திரன்)

Mon, 03/04/2019 - 15:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை