வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும்

எமது ஆட்சி முடிவடைவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் என  இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.  
 
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும்  பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,   யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.கடந்த காலத்தில் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. ஆனால் வடக்கு , கிழக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். வடக்கிற்கு 1,65,000 வீடுகள் தேவைப்படுகின்றன. 50,000 வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் அது சாத்தியமாகவில்லை. பொறுத்து வீட்டுத்திட்டம் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. சீன உதவியுடன் 30 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. மக்களின் வீடமைப்பு தேவை நிறைவேறவில்லை. இம்முறை 15 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை 5500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி முடிவடையவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும்.  
 
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அந்த மக்களுக்கு சொந்த இடங்களில் மீள் குடியேற வருமாறு புத்தளத்தில் வைத்து அவர்களை சந்தித்த வேளை நான் அழைப்பு விடுத்தேன். இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள வீடுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. கேப்பாப்புலவில் போராட்டம் நடத்தும் மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.
 
(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)
Fri, 03/15/2019 - 09:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை