இந்தியா பாகிஸ்தானுடன் மோத வேண்டும் -ஐ.சி.சி

ஒப்பந்தத்தின்படி உலக கிண்ணத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸார் 40 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்தது. இதன் காரணமாக ஒரு சில சர்வதேச விளையாட்டுகளை இந்தியா நடத்த முடியாமல் போனது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கூடாது என்று முன்னாள் வீரர்கள் கங்குலி, காம்பீர், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட வீரர்கள் போர்க்கொடி தூக்கினர்.

அதே நேரத்தில் தெண்டுல்கர், கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோர் உலக கிண்ணத்தில் ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆடாமல் 2 புள்ளிகளை இழப்பதைவிட விளையாடி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்று தெண்டுல்கர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசின் முடிவின்படி செயல்படுவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) கூறி இருந்தது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மே 30-ம் திகதி முதல் ஜூலை 14-ம் திகதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் ஜூன் 16-ம் திகதி மான்செஸ்டரில் நடக்கிறது.

இந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி உலக கிண்ணத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன் கூறியதாவது:-

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 2019 உலக கிண்ண போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடமல் போவது விதிமுறைக்கு மாறானது. ஒரு அணி மற்ற அணிகளுடன் விளையாடமல் போனதால் அதற்கான புள்ளிகள் வழங்கப்படும்.

இந்திய வீரர்கள் சமீபத்தில் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியது பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு உதவுவது அவசியமானது.

நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் தெளிவான குறிக்கோள் ஆகும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டித் தொடர் இருநாட்டு அரசுகள் மற்றும் இரு நாட்டு கிரிக்கெட் சபைகள் சம்மந்தப்பட்டது.

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை