மட்டக்களப்பு – கொழும்பு உள்ளூர் விமான சேவை நேற்று முதல் ஆரம்பம்

மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான மற்றுமொரு உள்ளூர் விமான சேவை நேற்று (01) வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதலாவது சேவையை ஆரம்பித்து வைக்கும் வைபவம் இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில் மட்டக்களப்பு விமான நிலையத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலி சாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கபில ஜெயசேகர, வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த புதிய விமானசேவையை ஆரம்பித்து வைத்தனர்.

அதிதிகள் முதல் விமானத்தில் பறந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை அழகை வானில் வைத்து கண்டு கழித்தனர்.

இந்த விமானசேவை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த தினங்களில் தினமும் காலையில் 10 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தை வந்தடையும் பின்னர் 11.30 மணிக்கு திருகோணமலைக்கு சென்று அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்புக்கு வந்து பின்னர் மாலை 3.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்படும்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

 

Sat, 03/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை