சர்வதேசத்திற்கு இணக்கம் தெரிவித்தாலும் அரசியலமைப்புக்கு அமையவே நடைமுறை

*ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு கால அட்டவணை தயாரிக்க முடியாது

புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை இலக்குவைத்தே இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் முன்வைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவந்த நாடுகள் தமது நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் வாக்கு வங்கிகளை இலக்குவைத்தே தீர்மானங்களை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம குற்றஞ்சாட்டினார்.

சர்வதேச ரீதியில் எந்தவிடயத்துக்கு இணக்கம் தெரிவித்தாலும் அதனை நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகவே நடைமுறைப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எந்தவொரு கால அட்டவணைக்கும் இணக்கம் தெரிவிக்கவில்லையென்றும், ஜெனீவாவில் இருந்துகொண்டு எவரும் இலங்கைக்கு கால அட்டவணையைத் தயாரிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சரத் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இம்முறை இலங்கையிலிருந்து விசேட தூதுக்குழுவினரை அனுப்பாது ஜெனீவாவில் உள்ள நிரந்தர வதிவிடப்பிரதிநிதியைக் கொண்டே பதிலளிப்பது என்பதே முன்னரிருந்த நிலைப்பாடாகும், எனினும், ஜனாதிபதியின் தலையீட்டைத் தொடர்ந்து இந்நிலைமை மாற்றப்பட்டது. இரு தரப்பு இணப்பப்பாட்டுடன் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் குழுவொன்று ஜெனீவா சென்றிருந்தது. நானும் அதில் பங்கெடுத்திருந்ததுடன், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியிருந்ததுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு உரிய பதிலையும் வழங்கியிருந்தார்.

ஜெனீவா விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையின் அரசியலமைப்பை மீறி செயற்பட முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறையொன்றை அமைப்பதற்கு அரசியலமைப்பிலும், சட்டத்திலும் இடமில்லையென்பதை முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் விரிவாகக் கலந்துரையாடல்களை நடத்தி விளக்கமளித்துள்ளது என்பதை அங்கு சுட்டிக்காட்டியிருந்தோம். சர்வதேச ரீதியில் என்ன விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்திருந்தாலும் இறுதியில் அரசியலமைப்பின் அடிப்படையிலேயே அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதற்காக உடனடியாக இது சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற தீர்மானத்துக்கு அமையவே இது சட்டமாக நடைமுறைக்கு வந்தது. என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அவை அரசியலமைப்புக்கு அமைவாகவே நிறைவேற்றப்பட முடியும்.

40/1 பிரேரணைக்கு அமையே மேலும் இரண்டு வருடங்கள் கிடைக்கின்றன. இலங்கை தொடர்பான பிரேரணையைக் கொண்டுவருவதில் கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் போன்ற மூன்று நாடுகளே பிரதானமாகவுள்ளன. இவை இலங்கை தொடர்பில் சுயாதீனமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனவா என்பதை வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமது நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களைத் திருப்திப்படுத்தி அவர்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த நாடுகள் செயற்படுகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் நிலைப்பாடே அந்த நாடுகளின் இறுதி நிலைப்பாடாகவிருக்கும். நாம் எவ்வாறான தர்க்கத்தை முன்வைத்தாலும் தமது வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டே அந்த நாடுகள் முடிவுகளை எடுக்கும்.

இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றிய இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிகவும் சிறப்பான கருத்துக்களை முன்வைத்தன. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை பாராட்டுவதுடன், பக்கச்சார்பற்ற விதத்தில் அவற்றின் செயற்பாடுகள் பார்க்கப்பட வேண்டும் என சீனா சுட்டிக்காட்டியிருந்தது.

அதேநேரம், தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கும் வகையில் 13ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. இவ்வாறான கருத்துக்களை எடுத்துக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த முடியும். இது பற்றிய கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவும் முடியும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உயிரிழந்த தொகைகள் குறித்து போலியான தகவல்களே முன்வைக்கப்பட்டிருந்தன. நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றிருந்தாலும் அவருடன் இருந்த அதிகாரிகளே அலுவலகத்தில் உள்ளனர். அவர்கள் போலியான தகவல்களையே ஆணையாளருக்கு வழங்குகின்றனர். பிச்சைக்காரனின் புண் போன்று மீண்டும் மீண்டும் இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை