வடக்கின் போரில் சென்.ஜோன்ஸ் கல்லூரி வலுவான நிலையில்

ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட  சாதனை முறியடிப்பு

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும், யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, ஆட்ட நேர முடிவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி, 121 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 107 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இதன்போது ஆட்டநேர முடிவில் சௌமியன் 46 ஓட்டங்களுடனும், தனுஜன் 57 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.இப்போட்டியின் போது, சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், புதிய சாதனையொன்றினை பதிவு செய்தனர்.இதற்கு முன்னதாக, 1990ஆம் ஆண்டு, ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 111 ஓட்டங்கள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. ஆனால் சௌமியன்- - தனுஜன் ஜோடி 121 ஓட்டங்களை பெற்று அந்த சாதனையை நேற்று முறியடித்தனர்.வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும், யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லமால் நடைபெற்று வருகின்றது.நூற்றாண்டுகள் பழமையான இந்த சமரில், யாழ். மத்தியக் கல்லூரி அணியின் தலைவராக செல்வராசா மதுசனும், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவராக மர்பின் அபினாஷ்சும் தலைமை தாங்குகின்றனர்.

113ஆவது அத்தியாயமாக நடைபெறும், இத்தொடர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த, சென்.ஜோன்ஸ் கல்லூரி, முதல் இன்னிங்ஸிற்காக 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டினோஷன் தெய்வேந்திரம் 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் இயலரசன் 5 விக்கெட்டுகளையும், வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய யாழ். மத்தியக் கல்லூரி அணி, 195 ஓட்டங்களுக்கு சுருண்டது.இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக இயலரசன் 71 ஓட்டங்களையும், வியஸ்காந்த் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் சாரன் 3 விக்கெட்டுகளையும், எல்சான், டினோஷன் மற்றும் துஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

14 ஓட்டங்கள் பின்னிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி, நேற்றய ஆட்ட நேர முடிவில், எவ்வித விக்கெட் இழப்பின்றி, 121 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இறுதிநாளான இன்று சென்.ஜோன்ஸ் கல்லூரி, தொடங்கவுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இப்போட்டியில், யாழ்.மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி சம்பியன் பட்டத்தை வென்றது.அத்தோடு, கடந்த இரண்டு வருடங்களாக சென்.ஜோன்ஸ் கல்லூரியிடம் இருந்த சம்பியன் கிண்ணத்தை தட்டி பறித்தது.இம்முறை அந்த கிண்ணத்தை யாழ்.மத்திய கல்லூரி அணி தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது பறிகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

புங்குடுதீவு குறுப் நிருபர்

Sat, 03/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை