நாட்டுக்கு இன்று தேவை பாராளுமன்றத் தேர்தல்

'பிரதான கட்சிகளுக்கு எதிர்வரும் காலம் சவாலானது' என்று கூறுகிறார் மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன

எல்லை நிர்ணய அறிக்கையில் குறைபாடுகள் இருப்பினும் மக்களின் வாக்குரிமையை ஒத்திவைக்க முடியாது!

ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிப் பேச எவருக்கும் உரிமையில்லை. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறியே அனைவரும் பதவிக்கு வந்தார்கள்

கேள்வி: -மாகாண சபைத் தேர்தலைத் துரிதமாக நடத்துவதற்கு ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரம்  சமர்ப்பித்துள்ளார். உங்கள் கட்சி உள்ளிட்ட அநேக கட்சிகளிடத்தில் இது தொடர்பில் எந்தக் கதையும் இல்லையே...

பதில்: -புதிய தேர்தல் முறைக்குச் செல்வது உள்ளிட்ட விடயங்களுக்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கினார்கள். பழைய முறையில் இருந்த குறைபாடுகளால்தானே எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமித்து புதிய முறை கொண்டு வரப்பட்டது. 'தாம் வளர்த்த பிள்ளை வேண்டாம்' என்பதைப் போன்றுதான் மஹிந்தவின் குழுவும், ரணிலின் குழுவும், மைத்திரி அணியும் எல்லை நிர்ணய சட்டத்தை நிராகரித்தன. அவர்கள் தேர்தலைப் பிற்போடுவதற்கு வழி சமைத்தார்கள். தற்போது நாட்டுக்குத் தேவைப்படுவது பாராளுமன்றத் தேர்தலேயன்றி மாகாண சபைத் தேர்தல் அல்ல.

கேள்வி: -சில மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிந்து ஒரு வருடமும் நிறைவடைந்துள்ளது. ஏன் மாகாண சபைத் தேர்தலை பின்தள்ளி விட்டு பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கேட்கிறீர்கள்?

பதில்: -எல்லை நிர்ணய அறிக்கையில் குறைபாடுகள் இருந்தாலும் வாக்கு உரிமையினை பிற்போட முடியாது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது தொடர்பில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் உரிய காலத்தில் தேர்தலை நடத்தும் அரசாங்கமல்ல அதிகாரத்திலிருப்பது. ஜனாதிபதி பதவி தொடர்பிலும் பிரச்சினை உள்ளது. நாட்டு மக்களுக்கு உள்ள பிரச்சினை பற்றியும் இந்த அரசாங்கத்திற்கு பொறுப்பில்லையே! இவ்வாறான நிலையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். நாட்டின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் மையம் இன்றி எதனையும் செய்ய முடியாது. அரசாங்கத்தின் இயலாமையினால்தானே மாகாண சபைத் தேர்தலையும் உரிய காலத்தில் நடத்த முடியாமல் போயிருக்கின்றது. நாட்டின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள மாகாண சபைகளால் முடியாது. அவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும். இப்போது நாடு அராஜக நிலைக்கு உள்ளாகியதைப் போன்றுள்ளது. அவ்வாறான நாட்டில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற வேண்டும்.

கேள்வி: -நீங்கள் அவ்வாறு கூறினாலும் ஜனாதிபதித் தேர்தல் பற்றித்தானே இந்நாட்களில் பிரதான கட்சிகள் பேசி வருகின்றன?

பதில்: -அவ்வாறு எவருக்கும் ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிப் பேசுவதற்கு உரிமை கிடையாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் வாக்குறுதி வழங்கினார். ரணில்,மைத்திரி இரு தரப்பும் அதிகாரத்திற்கு வந்ததும் அதைப் பற்றிக் கூறியேயாகும். சந்திரிகா பண்டாரநாயக்கவும் அதைத்தான் கூறினார். இவ்வாறு கூறியவர்களால் வெட்கமில்லாமல் அதைப் பற்றிப் பேச முடியுமா? எவ்வாறாயினும் 20வது யாப்புத் திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் நாமும் அபேட்சகர் ஒருவரை களமிறக்குவோம்.

கேள்வி: -ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளும் மட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி இருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: -பிரதான அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுக்கக் கூடிய அதிகாரத்தை தற்போது சிவில் சமூகங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அதனை நன்றாக அவதானிக்க முடிந்தது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு சிவில் அமைப்புக்கள் ஒன்று திரண்டன. மக்கள் விடுதலை முன்னணியைச் சுற்றியிருக்கும் நிபுணர் குழுவிற்கு எதிர்வரும் காலத்தில் மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

கேள்வி: -எனினும் அந்த சிவில் அமைப்புகளும் கடந்த காலங்களில் அவர்களது பங்களிப்பு தொடர்பில் சிலசில கருத்துகளைத் தெரிவித்தன அல்லவா?

பதில்: - அந்த மக்கள் அமைப்புகளுக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களிப்பைக் கொண்டு செல்வதற்குரிய இடம் உருவாகவில்லை. அந்த ஆற்றல், அவர்களது அனுபவங்களை முன்னே கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டும். அந்த விடயத்தில் ஜே.வி.பி முன்னணியில் இருக்கின்றது.

கேள்வி: -பிரதேச மட்டத்தில் மாத்திரமல்ல, இப்போது பாராளுமன்றத்திலும் கூட கொக்கெய்ன் பாவிப்பவர்கள் இருப்பதாக அவர்களே கூறுகின்றனரே...

பதில்: -போதைப் பொருள் பாவிப்பவர்கள், அதன் ஏஜெண்டுகளாகச் செயற்படுபவர்கள், பாதாள உலகத்தை வழிநடத்துபவர்கள் போன்றோர் பாராளுமன்றத்தில் இருப்பார்களாயின் அங்கு தூய்மையான அரசியலை மக்களால் எதிர்பார்க்க முடியாது என்பதை தற்போது சிவில் அமைப்புகள் புரிந்து கொண்டிருக்கின்றன.

கேள்வி: -நீங்கள் கூறுவதைப் போன்று மக்கள், அல்லது அமைப்புகள் கட்சிகளை விட்டுச் செல்வது தெரிகிறதா? ஜே.வி.பி செயலற்றுப் போயிருப்பதாகவே எமக்குத் தெரிகின்றது.

பதில்: -ஜே.வி.பி என்பது எப்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி. இந்த வருடம் தேர்தல் வருடம் என அடையாளப்படுத்தப்பட்டதுடன் நாம் அதற்கான அதிக செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம். எனினும் ஜே.வி.பி தேர்தலை இலக்காக வைத்து செயற்படும் கட்சியல்ல. அதே போன்று தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள அநேகமானவர்கள்  விபசார விடுதி உரிமையாளர் அல்லது மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள் போன்றவர்களே என்பதை தற்போது மக்கள் புரிந்து கொண்டிருப்பதைக் கூற வேண்டும். அவ்வாறானவர்கள் அவ்வாறு அரசியலில் தெரிவாகினர்? தகுதியானவர்கள் முன்வராததாலேயே இது நடந்தது என்பதையும் மக்கள் இப்போது விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்த இடைவெளியை நிரப்புவதற்கு மக்களும் சிவில் நடவடிக்கை மேற்கொள்வார்கள். அதற்கான நிபுணர் குழு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

கேள்வி: -அதனை மக்கள் விடுதலை முன்னணியா செய்கின்றது?

பதில்: -நாமும் ஒத்துழைப்புகளை வழங்குகின்றோம். இதன் போது இந்நாட்டைப் பாதுகாப்பதற்காக சிவில், கற்ற, அனுபவமுள்ள மக்கள் அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். கடந்த 19ம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அதன் பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு மாவட்ட கிளைகளாகவும் பிராந்திய மட்டங்களாகவும் செயற்பட வேண்டிய முறைகள் தொடர்பில் உரைகள் இடம்பெற்றன. அதே போன்று நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டமும் முன்வைக்கப்பட்டது. இதில் மேலும் முற்போக்கான அமைப்புகள் இணையும். மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய அரசியல் முகாம் ஒன்று உருவாகும்.

கேள்வி: -மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 85 வீதமானவை அவற்றின் பராமரிப்புக்கே செலவாகின்றது. இந்த 'வெள்ளை யானை' தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவைதானா?

பதில்: -மாகாண சபை முறை எமது நாட்டிற்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்றுதானே. அது எந்த வகையிலும் எமக்கு தகுதியானதல்ல. 'வெள்ளை யானை' கதையையும் முதலில் நாமே கூறினோம். எனினும் அது இன்று நாட்டின் ஒரு பகுதியாகியல்லவா போயிருக்கின்றது! எனவே அதனை ஒரேயடியாக நீக்க முடியாது. எனினும் உரிய முகாமைத்துவம் இடம்பெறுமாயின் அதனைக் கொண்டு நாட்டுக்கு பயனளிக்கக் கூடிய முறையில் செயற்பட முடியும். மாகாண சபை மாத்திரமல்ல, தற்போது பாராளுமன்றமும் 'வெள்ளை யானை' யாக ஆகிவிட்டது. இது முற்றாகவே மாறி விட்டிருக்கின்றது. மொத்தமாகவே சுத்தப்படுத்த வேண்டியுள்ளது.

(தாரக விக்ரமசேகர)

தமிழில்:எம்.எஸ்.முஸப்பிர்

(புத்தளம் விஷேட நிருபர்)

Sat, 03/02/2019 - 08:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை