தூரநோக்கும் ஆழப்பார்வையும் மிகுந்த வரவு - செலவுத் திட்டம்

முன்னாள் நிதியமைச்சர் ரொனி மங்களவுக்கு புகழாரம்

2019 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலீடு, அபிவிருத்தி, சமூக நலன்புரி மூன்றையும் சமமாக முன்னெடுத்துச் செல்வதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர எடுத்திருக்கும் முயற்சியை முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வரவு செலவுத்திட்டத்தின் பலன்களை முழுமையாக அனுபவிப்பதற்குரிய சாத்தியங்களைப் பெற்றுக்கொடுத்திருப்பதையிட்டு நிறைவான திருப்தியடைய முடியும் எனவும் ரொனி டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் நிதியமைச்சர் பதவி வகித்த காலத்தில் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பிக்க முடிந்ததாகவும் அந்தச் சாதனையை முறியடிப்பதற்கு முன்னாள் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ பிரயத்தனப்பட்ட போதிலும் அவரால் அதனை சாதிக்க முடியாது போனதாகத் தெரிவித்த ரொனி டி மெல், தற்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீர அந்தச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிட்டவேண்டுமெனப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

திறந்த பொருளாதாரத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து பதினொரு தடவைகள் தம்மால் வரவு செலவுத்திட்டங்களைச் சமர்ப்பிக்க முடிந்ததாகவும் அவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் தூரநோக்குப் பார்வை ஒளிமயமானதாகவே தென்படுவதாகவும் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் இந்த அறிக்கை உச்சநிலையில் காணப்படுவதாகவும் ரொனி டி மெல் புகழ்ந்துரைத்துள்ளார்.

நிதியமைச்சரின் ஆழப்பார்வை கொண்ட அனுபவித்தினூடே நாட்டின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டமாகவே இதனை தன்னால் பார்க்க முடிவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

Wed, 03/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை