க.பொ.த சா/தரத்தில் சித்தியடையாதவர்கள் உயர்தரத்தில் கற்கலாம்

26 தொழிற்பயிற்சி பாடங்கள் புதிதாக அறிமுகம்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் தொடர்ந்தும் உயர்தரத்தில் கற்பதற்காக தொழிற்பயிற்சி சம்பந்தப்பட்ட 26 பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அமைச்சர், இப் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்தாலும் சித்தியடையாவிட்டாலும் எவரையும் பாடசாலைக் கட்டமைப்பிலிருந்து வெளியேறிச் செல்ல அனுமதிக்கப் போவதில்லையென்றும் உறுதியாக கூறினார்.

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களிடம் மறைந்து காணப்படும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் க.பொ.த உயர்தரத்துக்காக தொழிற்பயிற்சி தொடர்பான 26 பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். க.பொ.த சாதாரணதரப் பரீட்சை ஒரு தடை தாண்டும் பரீட்சையல்லவென சுட்டிக்காட்டிய அமைச்சர் இதில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத அனைத்து மாணவர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்ற மாணவர்களுக்கும் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய முடியாமல் போன மாணவர்களுக்கும் ஒரே தடவையில் வாழ்த்துக்களை கூற முடிவதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை