தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை பிரதமர் பெற்றுத் தர வேண்டும்

சீனித்தம்பி யோகேஸ்வரன் எம்.பி.

ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கும் நிகழ்வு வெபர் விளையாட்டு மைதானத்தில் (சனிக்கிழமை) நடைபெற்றது.  

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,  

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக முன்னைய அரசு கூறியதைப் போன்று இந்த அரசாங்கம் கூற முடியாது. படைவீரர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என இந்த அரசாங்கமும் கூறினால், அது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமையும்.இவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை  அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியதாலே பெரும் ஆதரவோடு மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.  

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது. அரசியலமைப்புச் சட்டம் தெரியாதவர்களுக்கு இதுதான் அரசியல் யாப்புச்சட்டம் என்று சாட்டையடி கொடுத்து நிரூபித்துக் காட்டியுள்ளோம்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் பல அமைச்சுக்களை வைத்திருக்கின்றார். வடக்கை அபிவிருத்தியில் கட்டியெழுப் புவதில் பிரதமர் துரித கவனம் செலுத்துவதாக  கிழக்கு மாகாண மக்கள் வேதனையுடன் உள்ளனர்.வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரதிநிதிகள் வடக்குக்குச் சென்று வட மாகாணத்தை கட்டியெழுப்ப உதவுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை குளத்திலிருந்து ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்கு குடிநீர் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.ஆனால் உன்னிச்சையை அண்மித்த 14தொடக்கம் 20 வரையிலான கிராம மக்கள் குடிநீரின்றி தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர். வவுணதீவு பொதுமக்களும் குடிநீரின்றி பாதிக்கப்படுகின்றார்கள்.

 பிரதமரின் பதவியைக் காப்பாற்றிய எங்கள் மக்களின் பிரச்சினைகள்,தேவைகளை,பிரதமர் நிறைவேற்றித்தர வேண்டும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவடைதற்குள் குடிநீருக்காக ஏங்கும் எம் மக்களுக்கு 7,000 மில்லியன்களை ஒதுக்கி குடிநீருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.கிழக்கு மாகாணத்தில் தேவைகள் அதிகமாகவுள்ளன. வீடில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாகவுள்ளது.

அதேபோன்று கிழக்கில் அழிவடைந்துள்ள  தொழிற்சாலைகளை மீளப் புனரமைத்தல்,  எனபன அவசரமாக மேற்கொள்ளப்படல்  அவசியம். குறிப்பாக வாழைச்சேனை கடதாசி ஆலையின் தவிசாளரை நியமிக்கும்போது எம்மிடமும் ஆலோசனை பெறப்பட வேண்டும்

அவ்வாறு இல்லாவிடில் தொடர்ச்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு போராடவேண்டி வரும்.தமிழர்கள் எதிர்பார்த்துள்ள நீடித்து நிலைக்கக் கூடிய அரசியல் தீர்வு, அபிவிருத்திகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரிசனை செலுத்தி தமிழ்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றித் தர வேண்டும்.இந்த எதிர்பார்ப்பிலே இந்த அரசாங்கத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம் என்றார். 

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)   

Mon, 03/25/2019 - 10:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை