சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்ல முடியாது

சுமந்திரனுக்கு அமைச்சர் சமரசிங்க பதிலடி

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்லப்போவதாகக் கூறி சுமந்திரன் எம்.பி தேவையற்ற குழப்பத்தை நாட்டில் ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க குற்றஞ்சாட்டினார்.

ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லையென்பதால் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தும் தனது அரசியல் தேவைக்காக சுமந்திரன் கருத்துக்களை கூறி வருவதாகவும் அவர் கூறினார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மஹிந்த சமரசிங்க இந்தக் கருத்தை முன்வைத்தார்.

ஜெனீவா சென்று திரும்பிய பின்னர் பலர் மாறுபட்ட கருத்துக்களைக் கூறி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிப் பொறிமுறையை உருவாக்காவிட்டால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்போவதாக எச்சரித்தார். சட்டத்தரணி என்ற ரீதியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது என்பதைத் தெரிந்துகொண்டும் அவர் இவ்வாறு கருத்துக்களை முன்வைக்கின்றனார்.

2001ஆம் ஆண்டு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் ஒவ்வொரு வருடமும் மனித உரிமைகள் பேரவையில் பங்குபற்றி பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றபோதும் இலங்கை திரும்பிய பின்னர் அங்கு கூறிய விடயங்களை மறந்துவிடுகின்றோம். நாம் நிறைவேற்றிய விடயங்களை ஆராய்வதற்கோ அல்லது அவை குறித்த பின்னூட்டங்களைப் பெறுவதற்கோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதற்கான உள்ளகப் பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும்.

2009ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு நெருக்கமான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. 2012, 2013ஆம் ஆண்டு பிரேரணைகளில் தோல்வியே கிடைத்தது. 2014ஆம் ஆண்டாகும்போது 12 வாக்குகள் மாத்திரமே எமக்கு ஆதரவாகக் கிடைத்தன.

2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கடுமையான தடைவிதிப்புக்களைக் கொண்டுவருமளவுக்கு கடுமையான அறிக்கையொன்று வெளிவரவிருந்தது. எனினும். புதிய அரசாங்கத்தின் முயற்சியால் இந்த நிலைமை மாற்றப்பட்டது. இருந்தபோதும் நல்லிணக்க செயற்பாட்டில் எதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்பதைக் காண்பிக்க முடியாமையால், 2017ஆம் ஆண்டு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசத்தைப் பெற்றோம். இவ்வாறான நிலையில் 2019ஆம் ஆண்டில் மேலும் இரண்டு வருடங்களுக்கு கால அவகசாம் கிடைத்துள்ளது. நாம் நடைமுறைப்படுத்துவதாக இணங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்றங்கள் குறித்து பேரவைக்குத் தெரியப்படுத்த வேண்டும். இலங்கை தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை வெளியிடப்படும்போது அதில் நாம் முன்னெடுத்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை