‘பியர் பாவனையை ஊக்குவிக்க கல்வி அமைச்சு இடமளியாது’

பாடசாலைகளில் பியர் பாவனையை ஊக்குவிக்க கல்வி அமைச்சு இடமளிக்காது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பியர் மற்றும் மதுபான பாவனையை மட்டுப்படுத்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பிரதான பாடசாலைகளுக்கிடையில் வருடாந்தம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளின் போது பியர் மற்றும் மதுபான உற்பத்தி கம்பனிகள் பியர் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதை தடுக்க கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என விமலவீர திசாநாயக்க எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டார்.

வாய்மூல விடைக்காக கேள்வி எழுப்பிய விமலவீர திசாநாயக்க ,மாணவர்களிடையே பியர் பாவனையை மேம்படுத்த பியர் கம்பனிகள் செயற்படுவதை தடுக்குமாறும் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் ​கோரினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், பியர் ஊக்குவிப்பிற்கு அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்காது.உதவியும் செய்யாது.இதற்காக எந்த நிதியும் அமைச்சு வழங்காது.கம்பனிகள் தமது வியாபாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை எடுக்கும். இந்த நிலையிலே பியர் மற்றும் மதுபான பாவனையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

 

Sat, 03/09/2019 - 10:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை