ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க உடன் நடவடிக்கை அவசியம்

இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்கள் ஒரு நாள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை நடத்திய போதும் அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுவதாக தெரிவித்த  பிமல் ரத்நாயக்க எம்.பி. ஆசிரியர்களே கல்வித் துறையின் இதயமாக செயற்படுபவர்கள் என்பதை கல்வி அமைச்சர் புரிந்துசெயற்பட வேண்டும் என்றும் சபையில் கேட்டுக்கொண்டார். அத்துடன் தேசிய பாடசாலைகளில் நிலவும் 303 அதிபர்கள் வெற்றிடம் மற்றும் ஏனைய பாடசாலைகளில் நிலவும் 4000 ற்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கல்வி, உயர் கல்வியமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வித்துறைக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கும் நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை. அரசாங்கங்கள் கல்விக்கு 6 வீத நிதியை ஒதுக்க வேண்டும் என வெறும் வாய் வீச்சாக கூறப்படும் போதும் கடந்த அரசாங்கமும் சரி தற்போதைய அரசாங்கமும் சரி அதற்கான நிதியைப் படிப்படியாக குறைத்து வருவதையே காணமுடிகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 1.7 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கமும் கல்விக்கு 6 வீதம் ஒதுக்குவதாகக் குறிப்பிட்ட போதும் 1.7 வீதத்தையே ஒதுக்கியுள்ளது. உலகில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட நாடுகள் கல்விக்காக பாரிய நிதியை ஒதுக்குகின்றன.

இலங்கையில் வரலாற்றில் நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று குறைபாடுகள் காணப்பட்டாலும் இலவச கல்வி மற்றும் இலவச சுகாதார சேவையே. அதனை முறையாகக் கட்டிக்காப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இதற்கிணங்க 2017 ஆம் ஆண்டு கல்விக்கென 83 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் 45 வீதமான நிதியே செலவிடப்பட்டுள்ளது. அதேபோன்று 2018ல் 103 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட போதும் 76 வீதமான நிதியே செலவிடப்பட்டுள்ளது.

நாட்டில் 353 தேசிய பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 303 பாடசாலைகளுக்கு பதில் அதிபர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கல்வியிலன்றி அரசியல் உட்பட வெவ்வேறு விடயங்களிலேயே தமது காலத்தை செலவிட்டு வருகின்றனர். அதேபோன்று நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் 4000 பதில் அதிபர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு அதிபர்களை நியமிக்கும் நடவடிக்கைகளைக்கூட கல்வியமைச்சினால் மேற்கொள்ள முடியாத நிலையே உள்ளது.

உயர் கல்வி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவர்களைக் கைதுசெய்வதும் இடம்பெறுகிறது. அத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும். தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டில் இரண்டு இலட்சம் ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறெனில் உண்மையில் அவர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. சம்பள அதிகரிப்பு என்பது வேறு சம்பள முரண்பாடு என்பது வேறு. அவர்கள் தமது சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரியே பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர். இதனை அமைச்சு அலட்சியப்படுத்தக்கூடாது இது நாட்டின் கல்வி தொடர்பான பிரச்சினை.

இதில் கல்வியமைச்சோ அல்லது அரச சேவை ஆணைக்குழுவோ தவறு விட்டிருக்கலாம். அமைச்சர் இதனை நிவர்த்திசெய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம். கல்வித்துறையின் இதயமே ஆசிரியர்கள் தான். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய கவனம் செலுத்துவது அவசியம். கடந்த வருடத்தில் மாத்திரம் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது கல்வித்துறையில் நிலவும் பின்னடைவையே காட்டுகிறது. இது விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் பிமல் ரத்நாயக்க எம்.பி. மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Sat, 03/16/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக