ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்காவிடம் இலங்கை அணிக்கு வைட்வொஷ் தோல்வி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் 41 ஓட்டங்களால் டக்வர்த் லுவிஸ் முறையில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி ஒருநாள் தொடரில் வைட்வொஷ் தோல்வியை சந்தித்தது.

பகலிரவு போட்டியாக நியூலாண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மின்விளக்குகள் செயலிழந்ததால் முன்கூட்டியே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டி ஏற்பட்டது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மைதானத்திற்கு வெளிச்சம் தரும் மின் விளக்குகள் செலிழந்தன.

போட்டி இரண்டு மணி நேரம் தாமதமடைந்த நிலையில் டகவர்த் லுவிஸ் முறையில் போட்டியின் முடிவை தீர்மானிக்க நடுவர்கள் முடிவு செய்தனர்.

இலங்கை அணிக்காக அதிகூடிய ஓட்டங்களாக (56) அரைச்சதம் ஒன்றை பெற்ற குசல் மெண்டிஸ் அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.

பிரியாமால் பெரேரா (33), இசுரு உதான (32) மற்றும் அஞ்சலோ பெரேரா (31) சிறந்த ஆரம்பத்தை பெற்றபோதும் பெரிய ஓட்டங்களை நோக்க செல்ல தவறினர். இலங்கை அணி தொடர்ச்சியான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் சவாலான ஓட்டங்களை பெற தவறியது. ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பதிலெடுத்தாட வந்த தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக்கின் விக்கெட்டை 6 ஓட்டங்களில் வீழ்த்த இலங்கை அணியால் முடிந்தது. இதன்மூலம் டி கொக் தொடர்ச்சியாக பெற்ற ஐந்து அரைச்சதங்கள் முடிவுக்கு வந்தன. எனினும் ஏய்டன் மார்க்ரம் 75 பந்துகளில் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களை பெற்றார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கேப்டவுனில் நாளை நடைபெறவுள்ளது.

Mon, 03/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை