மக்கள் நலன்சாராத பட்ஜட்; எதிர்த்து வாக்களிக்க இணையுமாறு ஜே.வி.பி அழைப்பு

யாழ்ப்பாணத்தில் பிமல்

மக்களின் நலன்சாராதுள்ள, வரவு - செலவு திட்டத்தை வன்மையாக கண்டிப்பதுடன், வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக பிமல் ரத்நாயக்கஎம்.பி தெரிவித்தார்.  

தமிழ் தேசிய கூட்டமைப்பும் தம்முடன் இணைந்து பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டு கோள்விடுத்தார். யாழ்.நகரிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி அலுவலத்தில் நேற்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே  ​அவர் இவ்வாறு தெரிவித்தார்.   அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள வரவு-செலவு திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி வன்மையாக எதிர்க்கின்றது. இதனால் வரவு செலவு திட்டத்தை ஜே.வி.பி எதிர்க்கிறது.  

இந்த வரவு செலவுதிட்டம் மக்கள் நலன்சார்ந்த வரவு-செலவுதிட்டமாக இல்லாதுள்ளதால் எதிர்க்கத் தீர்மானித்துள்ளோம். போலியாக ஆங்காங்கு ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியிருந்தாலும் கூட, மக்களின் நலன்சார்ந்து இந்த பட்ஜட் உருவாக்கப் படவில்லை.  

கடந்த 2018ஆம் ஆண்டு வடமாகாணத்தில் மாத்திரம் 69பெண்கள் நுண்கடன் வசதிகளைப் பெற்று மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துள்ளதாக புள்ளிவிபரங்களில் கூறப்படுகின்றது.

அவ்வாறான கடன் திட்டத்தைப் போக்குவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் ஒரு வார்த்தை கூட இந்த வரவு செலவு திட்டத்தில் கிடையாது.  

வடக்கில் மாத்திரமன்றி முழு இலங்கையிலும் இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பைக் கேட்டு போராட்டங்களை முன்னெடுக்கும் செயற்பாடுகள் இன்றும் கூட நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாகக் கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்டத்தில் ஒரு வார்த்தை கூட கிடையாது.

எனவே, மக்களை ஏமாற்றுகின்ற வரவு செலவு திட்டமென்று கூறுவதுடன், எமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கவுள்ளோம்.  

ஆகையினால், இந்த வரவு செலவு திட்டத்தின் கீழ் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுதக் கூடிய, வடக்கிலுள்ள தொழிற்சாலைகளை மீள உருவாக்குவதற்கான ஒரு திட்டம் கூட இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை.

இங்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், இந்தப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளை புனரமைக்க வேண்டிய தேவையுள்ளது.

இவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித வார்த்தைப் பிரயோகங்களும் உள்ளடக்கப்படவில்லை.  

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்) 

Mon, 03/11/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை