ஐ.நா ஆணையர் அலுவலகம் அமைக்கும் யோசனையை நிராகரித்தது இலங்கை

*காலவரையறை வழங்குவது தீர்வு முயற்சிகளை தோல்வியடையச் செய்யும்

*இலங்கையர் அல்லாதவர்களை நீதித்துறையுள் உள்வாங்க அரசியலமைப்பில் இடமில்லை

சர்வதேச நடைமுறைகளை உள்ளடக்கிய புத்தாக்கமான மற்றும் சாத்தியமான உள்ளூர் பொறிமுறையின் ஊடாக பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச சமூகமும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கோரிக்கை விடுத்தார்.

பல தசாப்தமாக நீடித்த, சிக்கல் நிறைந்த மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கு துரித தீர்வைக் காண்பதற்காக காலவரையறையை வழங்கி அழுத்தம் கொடுப்பதால் முயற்சிகள் தோல்வியில் முடிவடையலாம். அத்துடன், இடைமாற்றுகால நீதிப் பொறிமுறையை உருவாக்கும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகமொன்றை இலங்கையில் அமைப்பதற்காக முன்வைக்கப்படும் நியாயப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விடயம் நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த எழுத்துமூல அறிக்கைக்கு பதிலளித்து உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்த விடயங்களை வலியுறுத்தினார்.

மனித உரிமை நிலைமைகளை முன்னேற்ற 2017ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கை அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதுடன், நட்டஈடு வழங்குவதற்கான அலுவலகமும் அமைக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள எழுத்துமூல அறிக்கையில் சில சரத்துக்கள் முரண்பாடான தகவல்களைக் கொண்டுள்ளன. யுத்தம் முடிவடைந்த பின்னர் இதுவரை 88.87 வீதமான அரசாங்க காணிகளும் 92.16 வீதமான தனியார் காணிகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் 23ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1499,1719 ஆம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்த எச்சங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற பல மனிதப்படுகுழிகள் கண்டுபிடிக்கப்படாலம் என்ற ஊகம் பகிரங்க அறிக்கையொன்றில் வெளியிடப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பதுடன் தேவையற்ற சந்தேகங்களை உருவாக்குகிறது.

அறிக்கையின் 68 ஆவது பந்தியில் கலப்பு நீதிமன்றத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரஜையல்லாதவர்களை நீதித்துறையில் உள்ளடக்குவதில் காணப்படும் அரசியலமைப்பு ரீதியான மற்றும் சட்டரீதியான மட்டுப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர், முன்னாள் மனித உரிமை ஆணையாளர்களுக்கும் ஏனைய உயர்மட்டத்தினருக்கும் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளனர். இலங்கை பிரஜை அல்லாதவர்களை நீதித்துறையில் உள்வாங்குவதாயின் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். அதனைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்படுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.

யுத்த காலத்தில் அரசாங்கப்படைகள் உலகத்தில் தடைவிதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே நடவடிக்கை எடுத்திருந்தன. எந்தவொரு சமூகத்துக்கு எதிராகவும் அவர்கள் செயற்படவில்லை. அது மாத்திரமன்றி எந்தவொரு நபருக்கு எதிராகவும் யுத்தக் குற்றம் தொடர்பிலோ அல்லது மனித நேயத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பிலோ நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. குற்றங்களில் ஈடுபட்டதை விசாரணைகள் உறுதிப்படுத்தாமல் சேவையில் இருக்கின்ற அல்லது ஓய்வுபெற்ற இலங்கை பாதுகாப்புப் படை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களது உரிமைகளை பிடுங்குவது அநீதியாகும்.

இந்த வலியுறுத்தல்கள் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா முகவர்கள் மேலும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச நிறுவனங்களின் சுதந்திரமான கணிப்பீடுகளுக்கும் நேரடியாக முரண்படுவதுடன் 12 ஒக்டோபர் 2017 அன்று ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரபுக்களின் இல்லத்தில் திருத்தியமைக்கப்பட்ட விடயங்கள் மட்டுமல்லாது பொதுத்தளங்களிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் எழுத்துக்களுக்கும் முரண்படுகின்றன .

இவ்வாறான சூழ்நிலையில் உண்மையான களநிலைமைகளை இணை அனுசரணை வழங்கும் நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. சிறந்த சர்வதேச நடைமுறையை உள்ளடக்கிய புத்தாக்கமான மற்றும் சாத்தியமான உள்ளகப் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கான ஊக்கத்தையும், ஒத்துழைப்பையும் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு வழங்க வேண்டும்.

குறிப்பாக அண்மையில் 2018ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட அரசியல் அம்சங்களின்போது எமது நீதி, அதிகார மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் சுதந்திரம் மற்றும் தன்முனைப்பு என்பவற்றை பிரதிபலித்தது அவற்றை தீர்த்தன. ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல “பாதிக்கப்பட்டவர்களினதும் சமூகத்தினதும் நம்பிக்கையை பாரியளவில் பெற்றுக்கொள்ளல்” என்பதனூடாக மட்டுமே இந்த நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவதற்கு எம்மால் முடியுமாக இருக்கும்.

அரசாங்கம் சார்பாக, மேலே உள்ள அளவுகோல்களின் அடிப்படையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இலங்கை தொடர்ந்து கடமையாற்றும்.

பலதசாப்தங்கள் நீளமான, உணர்வுபூர்வமான மிகவும் சிக்கல் நிறைந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைக் காணவேண்டும் என்பதற்காக காலவரையறையொன்றை விதித்து அழுத்தம் கொடுப்பதானது முயற்சிகளைத் தோல்வியடையச் செய்யலாம்.

இறைமை உள்ள நாடு என்ற வகையில் இலங்கையானது தனது மக்களுக்கு நீண்டகால சமாதானத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னுரிமைகளைத் தீர்மானிக்கும்.

நிலைமாற்றுகால நீதிப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகமொன்றை இலங்கையில் அமைப்பதற்காக முன்வைக்கப்படும் நியாயப்படுத்தல்களை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நமது நிருபர்

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை