இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிக்கு அமெரிக்கா இறைமை அங்கீகாரம்

சிரியாவிடம் இருந்து 1967 யுத்தத்தில் ஆக்கிரமித்த கோலன் குன்று பகுதியில் இஸ்ரேலின் இறைமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளார்.

இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வரவேற்றுள்ளார். இந்த பிரகடனத்தில் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை கைச்சாட்டபோது அடுத்த மாதம் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுத்திருக்கும் நெதன்யாகு அருகில் இருந்தார்.

டிரம்பின் முடிவு தமது இறைமைக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்று சிரியா கடும் கோபத்தை வெளியிட்டுள்ளது.

கோலன் குன்றை 1981 இல் இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்குள் இணைத்துக்கொண்டபோதும் சர்வதேச அளவில் அது அங்கீகரிக்கப்படவில்லை.

எனினும் கோலன் குன்றின் அந்தஸ்து மாற்றமடையவில்லை என்பது தெளிவானது என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குடர்ரஸின் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கா ஐ.நாவின் நிலைப்பாட்டையே பெற்றிருந்தபோதும், இதில் மாற்றங்கள் கொண்டுவரும் திட்டம் குறித்து டிரம்ப் கடந்த வாரம் ட்விட்டர் ஒன்றில் குறிப்பிட்டார்.

அந்த பகுதியை மீட்பதற்கு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிரியா பதிலளித்துள்ளது. எனினும் இஸ்ரேல் அதனை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று வொஷிங்டனில் வைத்து நெதன்யாகு செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

“எப்போதும் இல்லாத வகையில் கோலன் குன்று எமது பாதுகாப்பில் மிக முக்கிய இடம் வகிக்கும் நிலையிலேயே உங்களது இந்த பிரகடனம் வந்துள்ளது” என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் ஈரானிய படையின் அச்சுறுத்தலை காரணம் காட்டியே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இந்த முடிவை நான்கு வளைகுடா நாடுகள் நிராகரித்துள்ளன. இந்த முடிவு அமைதி முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கும் என்றும் சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.

அமெரிக்க துருப்புகளை நிலைநிறுத்தி இருக்கும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவூதி, பஹ்ரைன், கட்டார் மற்றும் குவைட் நாடுகளே இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்த பிரகடனம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் என்று சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வரும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் உத்தரவை ஒருபோதும் ஏற்க முடியாது என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது. இதற்கு எதிராக ஐ.நாவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலில் இன்னும் 2 வாரங்களில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பென்ஜமின் நெதன்யாகு பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவ்வேளையில் டிரம்பின் அறிவிப்பு அவருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

சிரிய தலைநகர் டமஸ்கஸில் இருந்து தென்மேற்காக 60 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இந்தப் பிராந்தியம் 1,200 சதுர கிலோமீற்றர்களை கொண்டதாகும்.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தின் கடைசி தருவாயில் சிரியாவிடம் இருந்து கோலன் குன்றின் பெரும் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியதோடு, 1973 யுத்தத்தில் சிரியா அதனை மீட்க எடுத்த முயற்சியை முறியடித்தது.

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை