போதைப் பொருளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களில் குறைபாடுகள் நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை எதிர்வரும் 31ம் தகதி போதைப் பொருளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்ட  பேரணியொன்றை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பில் நடத்தப்படவுள்ளதுடன் நீர்கொழும்பு, ராகமை, துடல்ல ஆகிய பகுதிகளிலும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கிராண்ட்பாஸ் புனித சூசையப்பர் ஆலயம், வத்தளை, நாயக்ககந்தை ஆலயங்களிலிருந்தும் மக்கள் பேரணி மட்டக்குளி விஸ்வைக் பார்க் மைதானத்தில் ஒன்றுகூடவுள்ளது.

மேற்படி பேரணிகள் இணைந்து பேராயர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பேரணி கூட்டத்தில் அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதுடன் அன்றைய தினம் ஞாயிறு திருப்பலிப் பூசையில் போதைப்பொருள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் பூசைக்குப் பின்னர் சகல ஆலயங்களிலும் பதாதைகளை ஏந்தி போதைப் பொருளுக்கு எதிராக அமைதி பவனி மேற்கொள்ளவும் பேராயர் சகல ஆலயங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை