சிரியாவின் ஐ.எஸ் பகுதியில் மீண்டும் தாக்குதல் ஆரம்பம்

சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) கட்டுப்பாட்டில் உள்ள சிறு நிலப்பகுதி மீது அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படை மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

தமது துருப்புகள் நேரடியாக கடும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாக சிரிய ஜனநாயக படையின் ஊடக அலுவலக தலைவர் முஸ்தபா பாலி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு சிரியாவின் பாகூஸ் கிராமத்தில் ஐ.எஸ் உறுப்பினர்கள் சிக்கியுள்ளனர்.

இந்த கிராமத்தை முழுமையாகக் கைப்பற்றிய பின் ஐ.எஸ் குழு 2014 ஆம் ஆண்டு அறிவித்த கலீபத் இராச்சியம் வீழ்த்தப்பட்ட பிரகடனம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.எஸ் தனது பட்டுப்பாட்டு நிலங்களை இழந்தபோதும் பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தக் குழு ஒரு சந்தர்ப்பத்தில் ஈராக் மற்றும் சிரியா உள்ளடங்கிய 88,000 சதுர கிலோமீற்றர் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு சுமார் எட்டு மில்லிய மக்கள் மீது தமது கொடிய சட்டங்களை அமுல்படுத்தியது. எண்ணெய், கொள்ளை, திருட்டு மற்றும் கடத்தல் மூலம் இந்தக் குழு பல பில்லியன் டொலர் வருமானத்தையும் ஈட்்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து ஆண்டு யுத்தத்தின் மூலம் பின்வாங்கச் செய்யப்பட்ட ஐ.எஸ் தற்போது ஈராக் எல்லையை ஒட்டிய சில நூறு சதுர மீற்றர் பகுதியில் சிக்கியுள்ளது.

இந்த பகுதியை மீட்பதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை குர்திஷ்களை தலைமையாகக் கொண்ட சிரிய ஜனநாயகப் படை தாக்குதல்களை ஆரம்பித்தது. ஆயுதக் கிடங்கொன்றை இலக்கு வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை வான் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்மூலம் அந்த முகாம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ் குழுவினால் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டிருக்கும் சிறு எண்ணிக்கையிலான பொதுமக்கள் வெளியேறுவதற்காக சிரிய ஜனநாயகப் படையின் தாக்குதல்கள் கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் குறைக்கப்பட்ட நிலையிலேயே தற்போது அது மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறி இருப்பதோடு கடந்த ஒரு மாத காலத்திற்குள் 4,000க்கும் அதிகமான ஐ.எஸ் போராளிகள் சரணடைந்திருப்பதாக அமெரிக்க ஆதரவுப் படை குறிப்பிட்டுள்ளது.

ஐ.எஸ் போராளிகளுக்கு சரணடைய சிரிய ஜனநாயகப் படை அவகாசம் வழங்கி இருப்பதாக அதன் பேச்சாளர் பாலி குறிப்பிட்டுள்ளார்.

Tue, 03/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை