அரச அலுவலகங்களில் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்த பிரதமர் வேண்டுகோள்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மின்சார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரச அலுவலகங்களில் மின்சார பாவனையை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அரச அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

முடியுமானால் தேசிய மின் இணைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்தி ஜெனரேட்டர்களை பயன்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று ஏற்பட்டிருக்கும் மின்சார நெருக்கடியை தீர்க்க துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் வறட்சி தொடர்ந்தவண்ணமுள்ளது. இதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இயற்கையோடு மோதுவது இயலாத காரியம்.

இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் அரச அலுவலகங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.  

அலுவலகங்களில் தேவையான நேரத்தில் மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும். குறைந்தளவு மின்குமிழ்களை பயன்படுத்த வேண்டும். மின் விசிறிகளை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளலாம்.

குளிரூட்டி குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வதன் மூலம் சிறியளவான தீர்வையாகவது எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.  

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மின்சார நெருக்கடிக்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் அறிக்கை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

தற்போதைய மின் நெருக்கடி முடிவுக்கு வரும் வரை அலரி மாளிகையில் தேசிய மின் இணைப்பின் மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்வது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அத்தியாவசியமான தேவைக்கு ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் இங்கு தெரிவித்தார்.

Fri, 03/29/2019 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை